சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:
வத்திக்கான் வானொலி

முகப்பு பக்கம் / திருத்தந்தை பிரான்சிஸ் / நிகழ்வுகள்

உயிர்ப்புப் பெருவிழா திருப்பலி,ஊர்பி எத் ஓர்பி


ஏப்.16,2017. கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழாவான இஞ்ஞாயிறு காலை பத்து மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில், உயிர்ப்புப் பெருவிழா திருப்பலியை நிறைவேற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ். இவ்வளாகத்தில் திருத்தந்தை திருப்பலி நிறைவேற்றிய பீடத்தின் முன்புறம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பல நாடுகளின் பல்லாயிரக்கணக்கான திருப்பயணிகளும் பலவண்ண ஆடைகளில், இதில் கலந்து கொண்டனர். திருப்பயணிகள் பலர் தங்கள் நாடுகளின் கொடிகளுடன் வந்திருந்தனர். கிறிஸ்துவின் உயிர்ப்பை எடுத்துரைக்கும் 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த மீட்பராம் இயேசுவின் படம் திருப்பலி மேடையில் வைக்கப்பட்டிருந்தது. இது, உரோம் நகரில், இலாத்தரன் பசிலிக்காவுக்கு அருகிலுள்ள புனிதப் படிகள் என்ற சிற்றாலயத்தில், திருத்தூயகத்தில் வைக்கப்பட்டுள்ள படமாகும், திருத்தந்தை மூன்றாம் இன்னோசென்ட் அவர்களின் விருப்பத்தின்பேரில், கிறிஸ்துவின் இத்திருவப்படம், முகம் தவிர, மற்ற அனைத்தும் வெள்ளியால் அமைக்கப்பட்டது. பிரான்ஸ் நாட்டின் அவிஞ்ஞோவில் வைக்கப்பட்டிருந்த இப்படம், புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களின் விருப்பத்தின்பேரில், இரண்டாயிரமாம் ஆண்டில், உரோம் நகருக்கு கொண்டுவரப்பட்டு புனிதப் படிகள் சிற்றாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. இத்திருப்படத்திற்கு வணக்கம் செலுத்தி திருப்பலியைத் தொடங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். நம்மைச் சுற்றி நிகழும் அனைத்து துயரங்களையும் நம்மால் புரிந்துகொள்ள இயலாவிட்டாலும், 'கிறிஸ்து உயிர்த்துவிட்டார்' என்பதை, நம்பிக்கையோடு எடுத்துச் சொல்வோம் என, இத்திருப்பலியில் ஆற்றிய மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்திருப்பலிக்குப் பின்னர், பகல் 12 மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராயல நடு மாடத்தில் “Urbi et Orbi” என்ற, ஊருக்கும், உலகுக்குமான செய்தியை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்தாலி நாட்டு முப்படையினரும், சுவிஸ் கார்ட்ஸ் என்ற, வத்திக்கானில் பணியாற்றும் திருத்தந்தையின் மெய்காப்பாளர் படையினரும் சீருடைகளுடன் அணிவகுத்து நின்று, இரு நாடுகளின் தேசியப் பண்களை, இசைக்கருவிகளுடன் முழங்கி, மரியாதை செலுத்தினர். திருத்தந்தை வழங்கிய ஊர்பி எத் ஓர்பி செய்தியில், இந்த ஆண்டு, உலகெங்கும் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களும், உயிர்ப்புப் பெருவிழாவை ஒரே நாளில் கொண்டாடுகிறோம். நாம் அனைவரும் இணைந்து: “ஆண்டவர் உரைத்ததுபோலவே, உயிர்த்துவிட்டார்” என்ற செய்தியை ஒரே குரலில் உலகெங்கும் அறிக்கையிடுகிறோம். பாவம், மரணம் என்ற இருளை ஒழித்த இயேசு, நாம் வாழும் காலத்தில் அமைதியை அளிப்பாராக! என்று கூறினார்.

இச்செய்திக்குப் பின்னர், எல்லாருக்கும் தனது நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தாலியிலிருந்தும், பல்வேறு நாடுகளிலிருந்தும் இங்கு வருகை தந்துள்ள, இன்னும், பல்வேறு மக்கள் தொடர்பு ஊடகங்கள் வழியே இச்செய்தியைக் கேட்டுக்கொண்டிருக்கும் எல்லாருக்கும் உயிர்ப்புப் பெருவிழா நல்வாழ்த்துக்கள். உயிர்த்த கிறிஸ்துவின் பாஸ்கா அறிவிப்பு, உங்கள் குடும்பங்கள், உங்கள் குழுக்கள், குறிப்பாக, திருஅவை மற்றும், மனித சமுதாயத்தின் வருங்காலப் புதிய தலைமுறைகள், நம்பிக்கையில் உயிர்த்துடிப்புடன் வாழ்வதற்கு உதவுவதாக. மேலும், இத்திருவழிபாட்டிற்கு மலர்கள் வழங்கிய மற்றும், இத்திருவழிபாட்டை அலங்கரித்த எல்லாருக்கும் எனது சிறப்பான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாண்டும், இம்மலர்கள், ஹாலந்து நாட்டிலிருந்து வழங்கப்பட்டுள்ளன. உயிர்த்த ஆண்டவரின் பிரசன்னத்தை நீங்கள் அனைவரும் ஒவ்வொரு நாளும் உணர்வீர்களாக. உயிர்த்த ஆண்டவர் வழங்கும் மகிழ்வையும், நம்பிக்கையையும் மற்றவரோடு பகிர்ந்துகொள்வீர்களாக. எனக்காகச் செபிக்க மறவாதீர்கள், மீண்டும் எனது பெருவிழா நல்வாழ்த்துக்கள்.

இவ்வாறு வாழ்த்துக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்பெருவிழாவின் சிறப்பு ஆசீரையும் அளித்தார். இயேசுவின் பிறப்பு, அவரின் உயிர்ப்பு ஆகிய இரு பெருவிழா நாள்களில் மட்டுமே இந்தச் சிறப்பு ஆசீரை வழங்குகிறார் திருத்தந்தை. இந்த ஆசீரை, நேரிடையாகவோ, ஊடகங்கள் வழியாகவோ பக்தியுடன் பெறுபவருக்குப் பரிபூரண பலன் உண்டு.

கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழா நாளில், “உயிர்ப்புப் பெருவிழா நல்வாழ்த்துக்கள்! உயிர்த்த கிறிஸ்துவின் மகிழ்வையும், நம்பிக்கையையும் நீங்கள் அனைவருக்கும் எடுத்துச் செல்வீர்களா!” என்ற வார்த்தைகளையும், தன் டுவிட்டர் செய்தியாக வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி