சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:
வத்திக்கான் வானொலி

முகப்பு பக்கம் / திருத்தந்தை பிரான்சிஸ் / மறைக்கல்வி, மூவேளை உரை

புதன் மறைக்கல்வியுரை : உயிர்த்த கிறிஸ்துவே நம் நம்பிக்கை


ஏப்.19,2017. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதன் காலையில் வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் அமர்ந்திருந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு, உயிர்ப்பெற்றெழுந்த கிறிஸ்துவே நம் நம்பிக்கை (cfr 1கொரி.15,1) என்ற தலைப்பில், மறைக்கல்வியுரை வழங்கினார். தூய பவுலடிகளார், கொரிந்தியருக்கு எழுதிய முதல் மடல், பிரிவு 15ல், கிறிஸ்து உயிர்பெற்றெழுதல் என்ற தலைப்பின்கீழ் கொடுக்கப்பட்டுள்ள பகுதியில், முதல் ஐந்து வரையுள்ள திருச்சொற்கள், பல மொழிகளில் முதலில் வாசிக்கப்பட்டன. சகோதர சகோதரிகளே, உங்களுக்கு நான் அறிவித்த நற்செய்தியை நினைவுறுத்த விழைகிறேன். அதை நீங்களும் ஏற்றுக் கொண்டீர்கள்; அதிலே நிலைத்தும் நிற்கிறீர்கள். 2நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தியை நீங்கள் உறுதியாகப் பற்றிக் கொண்டிருந்தால் அதன் வழியாக மீட்பு அடைவீர்கள்; இல்லையேல் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பொருளற்றதே. நான் பெற்றுக்கொண்டதும் முதன்மையானது எனக் கருதி உங்களிடம் ஒப்படைத்ததும் இதுவே; மறைநூலில் எழுதியுள்ளவாறு கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். மறைநூலில் எழுதியுள்ளவாறே மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார். பின்னர் அவர் கேபாவுக்கும் அதன்பின் பன்னிருவருக்கும் தோன்றினார்(1கொரி.15:1-5). அதன்பின்னர், அன்பு சகோதர சகோதரிகளே!, நாம் கொண்டாடிய மற்றும், திருவழிபாட்டில் தொடர்ந்து சிறப்பித்துக் கொண்டிருக்கின்ற, பாஸ்காவின் ஒளியில் இன்று நாம் சந்திக்கிறோம். கிறிஸ்தவ நம்பிக்கை குறித்த நம் தொடர் மறைக்கல்வி உரையில், நம் நம்பிக்கையாகிய உயிர்த்த கிறிஸ்து பற்றி, உங்களோடு இன்று நான் பேச விழைகிறேன் என, மறைக்கல்வியுரையை, முதலில் இத்தாலிய மொழியில் தொடங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசுவே நம் நம்பிக்கை என, தூய பவுலடிகளார் கொரிந்தியர்களிடம் கூறுகிறார். இயேசுவின் உயிர்ப்பு நிகழ்வு, நம் விசுவாசத்திற்கு அடித்தளமாக அமைந்திருக்கின்றது. இந்த வரலாற்று உண்மையில் நாம் நம்பிக்கை வைக்காமல் இருந்தால், கிறிஸ்தவ விசுவாசம், வெறும் மனித மெய்யியலாகவே இருக்கும். இயேசுவும், ஒரு மாபெரும் சமய ஆளாகவே நோக்கப்படுவார். தூய பேதுரு மற்றும், பன்னிரு திருத்தூதர்கள் குழு தொடங்கி, தூய பவுல் வரை, உயிர்ப்பெற்றெழுந்த கிறிஸ்துவைச் சந்தித்தவர்களை அடிப்படையாகக் கொண்டது நம் விசுவாசம். தூய பவுல், தமஸ்கு நகர் செல்லும் சாலையில், ஆண்டவரைத் திடீரென சந்தித்த வியப்பான நிகழ்வால் மனமாற்றம் அடைந்தவர். விசுவாசத்தில் கிறிஸ்துவைச் சந்திப்பது, எப்போதுமே வியப்பு நிறைந்தது. இச்சந்திப்பு, திறந்த இதயங்களைக் கொண்டிருப்பவர்களுக்கு வழங்கப்படும் திருவருள். இது, நம் வசதியான வாழ்வைப் புரட்டிப் போடுகிறது. மேலும், இது, இறப்பு மற்றும், துயரமான இடத்தில் வாழ்வையும், ஒளியையும் விதைத்து, ஓர் எதிர்பாராத வருங்காலத்தை நமக்குத் திறந்து விடுகின்றது. இதுவே, நம் பாஸ்கா மகிழ்வுக்குக் காரணம். நம் மத்தியில் வாழ்கின்ற உயிர்த்த இயேசுவில், கடவுளன்பின் வல்லமையைச் சந்திக்கின்றோம். இந்த அன்பு, மரணத்தின் மீது வெற்றி கண்டு, என்றென்றும் புதிய வாழ்வையும், இறப்பே இல்லாத நம்பிக்கையையும் நமக்கு வழங்குகின்றது.

இவ்வாறு, இப்புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்பொது மறைக்கல்வியுரையில் கலந்துகொண்ட, உரோம் இயேசு சபையின் இயேசு ஆலயத்திலும், உரோம் அயர்லாந்து கல்லூரியிலும் இச்செவ்வாயன்று புதிதாக தியாக்கோன்களாகத் திருப்பொழிவு பெற்றவர்களைச் சிறப்பாக வாழ்த்தினார். உரோமையில், இயேசு சபையில் புதிதாக, தியாக்கோன்களாக திருப்பொழிவு பெற்ற 15 பேரில் ஒருவரான சேவியர் அந்தோனி செல்வம் அவர்கள், இயேசு சபை மதுரை மாநிலத்தைச் சேர்ந்த தமிழர். இன்னும், இந்நிகழ்வில் பங்குகொண்ட பல நாடுகளின் எல்லாத் திருப்பயணிகளையும் வாழ்த்தி, தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி