சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:
வத்திக்கான் வானொலி

முகப்பு பக்கம் / திருத்தந்தை பிரான்சிஸ் / நிகழ்வுகள்

கிறிஸ்துவின் துணிச்சலான வீரர்களாக வாழ வாய்ப்பு


மே,06,2017. திருத்தந்தையரின் மெய்க்காப்பாளர்களாகப் பணியாற்றும் சுவிஸ் கார்ட்ஸ் எனப்படும் குழுவினர், வத்திக்கானில் ஆற்றிவரும் முக்கியமான பணியும், திருஅவையில் அவர்களின் இருப்பும், கிறிஸ்துவின் துணிச்சலான வீரர்களாக வளர்வதற்கு ஒரு வாய்ப்பாக உள்ளன என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

வத்திக்கானில் பணியாற்றுவதற்கென, புதிதாகப் பணியில் சேர்ந்த நாற்பது சுவிஸ் மெய்க்காப்பாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை, இச்சனிக்கிழமை காலையில் திருப்பீடத்தின் கிளமெந்தினா அறையில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.

சுவிஸ் மெய்க்காப்பாளர்கள், ஒவ்வோர் ஆண்டும் விழாக் கொண்டாடும்போது, உரோம் நகர் சூறையாடப்பட்ட வேதனை நிறைந்த நிகழ்வை நினைவுகூர்கின்றனர், ஆயினும், அன்று, அவர்கள் வீரத்துடன் செய்த உயிர்த் தியாகத்தை மட்டுமல்ல, அதில் சிறிதளவும் குறையாத மற்றொரு தியாகத்தையும் நினைவுகூர இன்று அழைக்கப்படுகின்றனர் என்று கூறினார், திருத்தந்தை.

இவ்வுலகின் பல்வேறு சக்திகளை எதிர்த்துப் போராடுவதோடு, பொய்களின் தந்தையாகிய தீயவனோடும் போராட வேண்டுமென்று கூறியத் திருத்தந்தை, இவ்வீரர்கள், கிறிஸ்துவில் விசுவாசமுள்ளவர்களாக, துணிச்சலுடன் வாழ அழைக்கப்பட்டுள்ளனர் என்றும், திருத்தந்தை கூறினார்.

சுவிஸ் கார்ட்ஸ் திருப்பீடத்திற்கு விசுவாசமாக இருந்து, ஆற்றிவரும் பணிகளுக்குப் பாராட்டும், நன்றியும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

1527ம் ஆண்டில் உரோம் சூறையாடப்பட்டபோது, அப்போதையத் திருத்தந்தை 7ம் கிளமென்ட் அவர்களைக் காப்பாற்றுவதற்காகப் போரிட்ட சுவிஸ் வீரர்களில் 147 பேர், கொல்லப்பட்டனர். அவ்வாண்டு மே 6ம் தேதி இது நடந்தது. அதன் நினைவாக, வத்திக்கானில், மே 6ம் தேதி சுவிஸ் கார்ட்ஸ் விழா சிறப்பிக்கப்படுகிறது. இந்நாளில் புதிய சுவிஸ் கார்ட்ஸ், பணியில் சேர்க்கப்படுகின்றனர்.

மே 6, இச்சனிக்கிழமையன்று சேர்க்கப்பட்ட நாற்பது பேரும், புதிய பயிற்சி முறை ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர். வத்திக்கானில் தொடங்கும் பயிற்சி வகுப்புகளைத் தொடர்ந்து, Isoneலுள்ள புகழ்பெற்ற சுவிஸ் கார்ட்ஸ் பள்ளியில், இவர்கள், ஒரு மாதம் பயிற்சி பெறுவர். இப்பயிற்சி முதல்முறையாக நடைபெறவுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி