சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:
வத்திக்கான் வானொலி

முகப்பு பக்கம் / திருஅவை / ஆசியா

சிரியாவின் அலெப்போ நகர், பாத்திமா அன்னைக்கு அர்ப்பணம்


மே,10,2017. சிரியாவில் இஸ்லாமியத் தீவிரவாத அமைப்பின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட அலெப்போ நகரை, பாத்திமா அன்னைக்கு அர்ப்பணமாக்கும் முயற்சியில், சிரியா தலத்திருஅவை ஈடுபட்டுள்ளது என்று ஆசிய செய்தி கூறுகிறது.

மிகக் கடினமான சூழல்களைச் சந்தித்து, நம்பிக்கையுடன் வெளியேறி வந்துள்ள கிறிஸ்தவர்கள், பாத்திமா அன்னையை தங்கள் பாதுகாவலராக தெரிவு செய்திருப்பது மிகப் பொருத்தமானது என்று, அலெப்போவின் கல்தேய வழிபாட்டு முறை பேராயர் அந்துவான் அவுதோ (Antoine Audo) அவர்கள் ஆசிய செய்தியிடம் கூறினார்.

சிரியா நாட்டில் வாழும் கத்தோலிக்கர்களுக்கு, மரியன்னையின் மாதமான, மே மாதம் முக்கியமானது என்று கூறிய பேராயர் அவுதோ அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாத்திமா திருத்தலத்தில், உலக மக்களை மீண்டும் அன்னையின் பாதுகாப்பில் ஒப்படைக்கும் அதே வேளையில், இந்நகரம், அன்னைக்கு அர்ப்பணமாவது பொருத்தமாக உள்ளது என்று எடுத்துரைத்தார்.

உலகப்போரை நெருங்கிக்கொண்டிருந்த மனித சமுதாயத்தை, செபத்தில் இணைக்கும் ஒரு முயற்சியாக, பாத்திமாவின் அன்னை மரியா தோன்றினார் என்பதைக் சுட்டிக்காட்டிய பேராயர் அவுதா அவர்கள், அலெப்போ மக்களும், தாங்கள் சந்தித்த போருக்கு செபத்தின் வழியே பதிலளித்துள்ளனர் என்று கூறினார்.

அலெப்போ நகரில், மே 11, இவ்வியாழன் முதல் துவங்கும் அன்னையின் விழா மூன்று நாட்கள் தொடரும் என்றும், மே 13 சனிக்கிழமை நடைபெறும் திருப்பலி, திருத்தந்தை திருப்பலியாற்றும் அதே  வேளையில் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் ஆசிய செய்தி கூறுகிறது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி