சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:
வத்திக்கான் வானொலி

முகப்பு பக்கம் / திருஅவை / உலகம்

பாத்திமா அன்னையின் செய்திகள், மனித குலத்திற்கு பாடங்கள்


மே,10,2017. துன்பகரமான நிகழ்வுகளைக் கண்ட 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில், மனுக்குலம் முழுவதற்கும் தேவையான செய்திகளை வழங்க, போர்த்துக்கல் நாட்டின் பாத்திமா நகரில் அன்னை மரியா தோன்றினார் என்று, கர்தினால் ஜியோவான்னி பத்திஸ்தா ரே அவர்கள், கூறியுள்ளார்.

ஆயர்கள் பேராயத்தின் தலைவராகப் பணியாற்றி, 2010ம் ஆண்டு ஒய்வுபெற்ற, கர்தினால் ரே அவர்கள், பாத்திமா திருத்தலத்தில், அன்னை காட்சியளித்த நிகழ்வுகளின் முதல் நூற்றாண்டு, மே 13, வருகிற சனிக்கிழமை, சிறப்பிக்கப்படுவதையொட்டி எழுதியுள்ள ஒரு கட்டுரை, வத்திக்கான் நாளிதழ் L’Osservatore Romanoவில் வெளியாகியுள்ளது.

மனித குலம் துன்பங்களைச் சந்திக்கவிருப்பதை முன்கூட்டியே அறிந்த மரியன்னை, ஓர் அன்னைக்குரிய பரிவோடு, தன் பிள்ளைகளைத் தேடி வந்ததை, பாத்திமா அன்னையின் காட்சிகளில் நாம் உணர முடிகிறது என்று கர்தினால் ரே அவர்கள் கூறியுள்ளார்.

இடையர்களான மூன்று பேருக்கு மரியன்னை தந்த இரகசியங்களில் இறுதியான இரகசியம், திருத்தந்தை ஒருவர் மீது மேற்கொள்ளப்படும் கொலை முயற்சி என்று கூறப்பட்டதற்கு ஏற்ப, 1981ம் ஆண்டு, மே மாதம் 13ம் தேதி, பாத்திமா அன்னையின் திருநாளன்று, புனித பேதுரு வளாகத்தில் திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்பதை, கர்தினால் ரே தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்தக் கொலை முயற்சியில், திருத்தந்தை, புனித 2ம் ஜான்பால் அவர்களின் உடலில் பாய்ந்த குண்டு, தற்போது, பாத்திமா அன்னை மரியாவின் மகுடத்தில் இணைக்கப்பட்டுள்ளது என்பதையும் கர்தினால் ரே அவர்கள் தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

பாத்திமா அன்னை வழங்கிய செய்திகளும், இரகசியங்களும் மனித சமுதாயத்திற்கு எப்போதும் தேவைப்படும் பாடங்களாக அமைந்துள்ளன என்று, கர்தினால் ரே அவர்கள் தன் கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி