சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:
வத்திக்கான் வானொலி

முகப்பு பக்கம் / திருஅவை / ஆசியா

தென் கொரிய புதிய அரசுத்தலைவருக்கு கர்தினால் வாழ்த்து


மே,12,2017. "நான் எல்லாருக்கும் எல்லாமானேன்" (1 கொரிந்தியர் 9:22) என்று திருத்தூதர் பவுல் கூறிய சொற்கள், தென் கொரிய நாட்டின் புதிய அரசுத்தலைவரின் பணியை வழிநடத்தவேண்டும் என்று, சோல் (Seoul) பேராயர், கர்தினால் ஆண்ட்ரு யியோம் சூ-ஜுங் (Andrew Yeom Soo-jung) அவர்கள், அரசுத்தலைவருக்கு அனுப்பியுள்ள செய்தியில் கூறியுள்ளார்.

மே 10, இப்புதனன்று, தென் கொரியாவின் புதிய அரசுத்தலைவராகப் பொறுப்பேற்ற மூன் ஜே-இன் (Moon Jae-in) அவர்களுக்கு வாழ்த்துக்களைக் கூறியுள்ள கர்தினால் யியோம் சூ-ஜுங் அவர்கள், தென் கொரிய எதிர்காலத்தின் முக்கிய தருணத்தில், 19வது அரசுத்தலைவர்  பொறுப்பேற்றுள்ளார் என்று கூறியுள்ளார்.

பிளவுபட்டு நிற்கும் தென் கொரிய மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்துச் செல்லவேண்டிய நிலையில் உள்ள அரசுத்தலைவர் மூன் ஜே-இன் அவர்கள், "நான் எல்லாருக்கும் எல்லாமானேன்" என்று கூறிய புனித பவுலின் வழியைப் பின்பற்றுமாறு கர்தினால் யியோம் சூ-ஜுங் அவர்கள், வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வட கொரிய நாட்டுடன் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்போவதாக அரசுத்தலைவர் கூறியிருப்பது, கொரிய தீபகற்பத்தில் மீண்டும் அமைதியை உருவாக்கும் என்ற நம்பிக்கை அளித்துள்ளது என்று கர்தினால் யியோம் சூ-ஜுங் அவர்கள், தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூன் ஜே-இன் அவர்கள், தென் கொரிய நாட்டில் அரசுத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள இரண்டாவது கத்தோலிக்கர் என்பதும், இவருக்கு முன்பு, 1998ம் ஆண்டு முதல், 2003ம் ஆண்டு முடிய, கத்தோலிக்கர் கிம் டே-ஜுங் (Kim Dae-jung) அவர்கள், அரசுத்தலைவராகப் பணியாற்றியபோது, 'சூரிய ஒளி திட்டம்' என்ற பெயரில், வட கொரிய அரசுடன் மேற்கொண்ட அமைதி முயற்சிகளுக்கு, நொபெல் அமைதி விருது பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கன.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி