சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:
வத்திக்கான் வானொலி

முகப்பு பக்கம் / திருத்தந்தை பிரான்சிஸ் / நிகழ்வுகள்

நம்பிக்கையும் அறிவியலும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதல்ல


மே,12,2017. அளவற்ற வகையில் பரந்து விரிந்திருக்கும் விண்வெளி, மற்றும் அளவற்ற காலம் என்ற உண்மைகளுக்கு முன், மனிதர்களாகிய நாம் எவ்வளவு சிறியவர்கள் என்பதை உணர முடிகிறது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன்னைச் சந்திக்க வந்திருந்த பன்னாட்டு அறிவியலாளர்கள் குழுவிடம் கூறினார்.

உரோம் நகருக்கருகே காஸ்தெல் கந்தோல்போ எனுமிடத்தில்  இயேசு சபையினரால் நிறுவப்பட்டுள்ள வத்திக்கான் விண்வெளி ஆய்வு மையத்தில், மே 9ம் தேதி முதல், 12ம் தேதி முடிய, நடைபெற்ற ஒரு பன்னாட்டு கருத்தரங்கில் கலந்துகொண்ட பிரதிநிதிகளை, இவ்வெள்ளி காலை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, இக்கருத்தரங்கில் பேசப்பட்ட கருத்துக்கள், திருஅவைக்கு மிக முக்கியமானவை என்பதைச் சுட்டிக்காட்டினார்.

பிரபஞ்சத்தின் பரிணாம வளர்ச்சி, விண்வெளி மற்றும் காலம் இவற்றின் கட்டமைப்பு போன்ற கருத்துப் பரிமாற்றங்களில் ஆய்வாளர்கள் பங்கேற்றது, திருஅவைக்கு மிகவும் உதவியாக அமையும் என்பதை, தன் உரையில் எடுத்துரைத்தார், திருத்தந்தை.

கத்தோலிக்க அருள்பணியாளரும், விண்வெளி ஆய்வாளருமான இயேசு சபை அருள்பணி Georges Lemaître என்பவரைக் குறித்துப் பேசிய திருத்தந்தை, மத நம்பிக்கைக்கும், அறிவியலுக்கும் இடையே உள்ள படைப்பாற்றல் மிக்க உரசலை இவ்வருள்பணியாளர் நன்கு உணர்ந்திருந்தார் என்று குறிப்பிட்டார்.

நம்பிக்கை, அறிவியல் இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதல்ல என்பதை, பல அறிஞர்களும், புனிதர்களும் உணர்ந்திருந்தனர் என்பதையும் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இவ்விரண்டையும் செயற்கைத்தனமான முறையில் இணைப்பதோ, பிரிப்பதோ பாதிப்புக்களை உருவாக்கும் என்பதை தெளிவுபடுத்தினார்.

மனித அறிவின் உன்னத உயரங்களை அடையும்போது, அங்கு இறைவனின் இருப்பையும், உண்மையின் ஒளியையும் காண்பதற்கு, நமக்கு திறந்த உள்ளமும், ஆழ்ந்த நம்பிக்கையும் தேவை என்றும், அத்தகைய பணியில் ஈடுபட்டிருக்கும் பன்னாட்டு அறிஞர்களை தான் பாராட்டுவதாகவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் உரையின் இறுதியில் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி