சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:
வத்திக்கான் வானொலி

முகப்பு பக்கம் / திருத்தந்தை பிரான்சிஸ் / மறையுரைகள்

திருத்தந்தை : உண்மையான கோட்பாடு ஒன்றிணைக்கும்


மே,19,2017. உண்மையான கோட்பாடு ஒன்றிணைக்கும், மாறாக, கருத்தியல் கொள்கைகள் பிரிவினையை ஏற்படுத்தும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், இவ்வெள்ளி காலை நிறைவேற்றியத் திருப்பலியில் மறையுரை வழங்கினார்.

கிறிஸ்தவத்திற்கு மதம் மாறிய பிற சமயத்தவர், மோசே சட்டத்தின்படி, விருத்தசேதனம் செய்துகொள்ளத் தேவையில்லை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்ட, ஏறக்குறைய கி.பி.49ம் ஆண்டில் நடைபெற்ற எருசலேம் பொதுச்சங்கம் குறித்து, மறையுரைச் சிந்தனைகளை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

முதல் கிறிஸ்தவ சமூகத்திலும், அதிகாரத்திற்காக ஏங்கி, அதற்குப் போட்டிப் போட்டவர்களும், பொறாமை கொண்டவர்களும் இருந்தனர், இவர்களில் சிலர், அதிகாரத்தை, தந்திரமாக விலைக்கு வாங்கவும் முயற்சி செய்தனர் என்றுரைத்த திருத்தந்தை, பிரச்சனைகள் எப்போதும் இருந்தன, திருஅவையிலும் இருந்தன என்றும் கூறினார்.

பாவிகளாகிய நாம், நம்மைப் பாவங்களிலிருந்து மீட்கும் ஆண்டவரை தாழ்ச்சியோடு அணுக வேண்டும் என்றும், கிறிஸ்தவர்களாக மாறுவதற்கு அழைப்பவர், தூய ஆவியாரே என்றும், மறையுரையில் கூறினார், திருத்தந்தை.

திருத்தூதர் பணிகளிலிருந்து எடுக்கப்பட்ட இந்நாளின் முதல் வாசகத்தை மையப்படுத்தி  மறையுரையாற்றிய திருத்தந்தை, அன்று, திருத்தூதர்களும், மூப்பர்களும், அந்தியோக்கியாவுக்கு நற்செய்தி அறிவிக்கச் சீடர்களைத் தேர்ந்தெடுத்தபோது, அவர்களிடையே வலுவான விவாதங்கள் இடம்பெற்றன, இதில் ஈடுபட்டவர்கள், தூய ஆவியாரின் துணையுடன் நடத்திச் செல்லப்பட்டனர் என்றும் கூறினார்.

திருத்தூதர்கள் எடுத்த தீர்மானம், அரசியல் ஒப்பந்தம் அல்ல, மாறாக, அது தூய ஆவியாரின் தூண்டுதலால் எடுக்கப்பட்டது என்றும், எந்தவித அர்ப்பணமும் இன்றி, கிறிஸ்தவ சமூகங்களைத் தொந்தரவு செய்யும் ஆட்களும் இருந்தனர் என்றும்  திருத்தந்தை கூறினார்.

கிறிஸ்தவ சமூகங்களில் பிளவுகளை ஏற்படுத்தும் ஆட்கள், விசுவாசிகள் அல்ல, மாறாக, அவர்கள், கருத்தியல் கொள்கையின்படி நடப்பவர்கள் என்றும், இவர்கள் தூய ஆவியாரின் பணிகளுக்குத் தங்கள் இதயங்களை மூடிக்கொள்பவர்கள் என்றும்  திருத்தந்தை மறையுரையில் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி