2015-01-23 16:23:00

தாவோஸ் 45வது உலக பொருளாதார கருத்தரங்கு


சன.23,2015. சுவிட்சர்லாந்து நாட்டின் தாவோஸ் நகரில் தொடங்கியுள்ள உலக பொருளாதார கருத்தரங்கில் விவாதிக்க வேண்டியவைகளில் பல விவகாரங்கள் ஓர் உறுதியற்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது என்று அவ்வுலகக் கருத்தரங்கில் கலந்துகொள்ளும் திருஅவைத் தலைவர் ஒருவர் கருத்து தெரிவித்தார்.

நாடுகளின் தலைவர்கள், தொழிலதிபர்கள், பொருளாதார நிபுணர்கள், அரசியல்வாதிகள், தூதரக அதிகாரிகள் என நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 2,500க்கும் அதிகமான பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் 45வது உலக பொருளாதார கருத்தரங்கு குறித்து வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த டப்ளின் பேராயர் Diarmuid Martin அவர்கள் இவ்வாறு கூறினார். 

தலைமைத்துவப் பிரச்சனை, வருவாயில் சமத்துவமின்மைகள் உட்பட பல முக்கிய விவகாரங்கள் விவாதிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த அயர்லாந்து பேராயர் Diarmuid Martin அவர்கள், மத்திய கிழக்கிலும், உக்ரேய்னிலும், உலகின் பிற பகுதிகளிலும் இடம்பெறும் சண்டைகள், கலாச்சார நெருக்கடிகள் போன்ற கவலைதரும் விவகாரங்கள்  விவாதிக்கப்படும் போக்கு திருப்தியளிப்பதாக இல்லை எனக் கருத்து தெரிவித்தார்.

அரசியல் நிறுவனங்களும் அரசியல்வாதிகளும் ஆற்றவேண்டிய கடமை பற்றிய கவலை பரவலாகக் காணப்படுவதாகவும், ஏழைகளுக்கு உறுதியான எதிர்காலம் அமைக்கப்படாத நிலையைக் காண முடிகின்றது எனவும் கூறினார் பேராயர் Martin.

இலத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்ரிக்காவிலிருந்து மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே பிரதிநிதிகள் இதில் கலந்துகொள்கின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.