2015-02-10 15:35:00

கர்தினால் Becker மறைவுக்கு திருத்தந்தை இரங்கல்


பிப்.10,2015. ஜெர்மன் நாட்டு இயேசு சபை கர்தினால் Karl Josef Becker அவர்கள் இறந்ததை முன்னிட்டு தனது இரங்கல் தந்திச் செய்தியை, உலக இயேசு சபை அதிபர் அருள்பணியாளர் Adolfo Nicolas Pachon அவர்களுக்கு அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கர்தினால் Becker அவர்கள், திருப்பீடத்துக்கும், இறையியல் ஆய்வுக்கும் பல ஆண்டுகள் ஆற்றிய நற்பணியைப் பாராட்டியுள்ள திருத்தந்தை, இயேசு சபையினர் அனைவருக்கும் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களும் அருள்பணி Adolfo Nicolas அவர்களுக்கு இரங்கல் தந்திச் செய்தியை அனுப்பியுள்ளார்.

 

இச்செவ்வாயன்று உரோம் நகரில் இறந்த 86 வயது கர்தினால் Karl Josef Becker அவர்கள், விசுவாசக்கோட்பாட்டுத் திருப்பேராயத்தில் பல ஆண்டுகள் ஆலோசகராகப் பணியாற்றியவர்.

ஏற்புடமை பற்றி கத்தோலிக்கத் திருஅவைக்கும், லூத்தரன் கூட்டமைப்புக்கும் இடையே இடம்பெற்ற உரையாடலிலும் (1997-1999), புனித பத்தாம் பத்திநாதர் அமைப்போடு திருப்பீட அவை நடத்திய எட்டு உரையாடல் அமர்வுகளிலும் (2009-2011) ஈடுபட்டிருந்த இவர், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால் 2012ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி கர்தினாலாக உயர்த்தப்பட்டார்.

1928ம் ஆண்டில் ஜெர்மனியில் பிறந்த கர்தினால் Becker அவர்கள், தனது இருபதாவது வயதில் இயேசு சபையில் சேர்ந்தார். 1958ம் ஆண்டில் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்ட இவர், இறையியலில் முனைவர் பட்டம் பெற்றவர். உரோம் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் நாற்பது ஆண்டுகளுக்கு (1969-2003) மேலாகவும், ஓய்வுபெற்ற பின்னரும் கோட்பாட்டு இறையியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றியவர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.