2015-02-27 14:43:00

தியானத்தை நிறைவுசெய்து வத்திக்கான் திரும்பினார் திருத்தந்தை


பிப்.27,2015. தியான நாள்களில் தங்கள் இதயங்களில் விதைக்கப்பட்ட விதைகள் வளர்வதற்கு ஆண்டவர் இயேசு உதவி செய்வார் என்ற நம்பிக்கையைத் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அருள்பணியாளர்களுக்குத் தியானம் கொடுப்பது எளிதானதல்ல, இவர்கள் கொஞ்சம் சிக்கலானவர்கள், எனினும், தனக்கும், திருப்பீடத் தலைமையக அதிகாரிகளுக்கும் தியானப் போதனைகளை வழங்குவதில் தியானப் போதகர் கார்மேல் சபை அருள்பணியாளர் Bruno Secondin அவர்கள் வெற்றியடைந்துள்ளார் என்று அவருக்கு நன்றி தெரிவித்தார் திருத்தந்தை.

இத்தியானத்தைச் செய்த நாங்கள் அனைவரும் எம் கரங்களிலும் இதயங்களிலும் எலியாவின் மேலாடையின் ஒரு துண்டுத்துணியை எம் இதயங்களிலும் கரங்களிலும் எடுத்துச் செல்வோம் என்று தான் நம்புவதாகவும் கூறினார் திருத்தந்தை.

உரோம் நகருக்குத் தெற்கே ஏறக்குறைய இருபது மைல் தூரத்திலுள்ள அரிச்சா நகரில் விண்ணகப் போதகர் தியான இல்லத்தில் கடந்த ஞாயிறன்று(பிப்.22) தொடங்கிய ஐந்து நாள் தியானத்தை இவ்வெள்ளி காலையில் நிறைவுசெய்து வத்திக்கான் வந்தடைந்தார்  திருத்தந்தை பிரான்சிஸ்.

“இறைவாக்கினர் எலியா காலத்தில் இடம்பெற்ற போலித் தெய்வ வழிபாட்டை, விசுவாசத்தில் ஆழமற்ற நவீன சமய உணர்வோடு ஒப்புமைப்படுத்தி தியான உரையாற்றிய அருள்பணி Secondin அவர்கள், உண்மையான மற்றும் உயிர்த்துடிப்பான வழிபாட்டில் ஆர்வம் காட்டுமாறு வலியுறுத்தினார்.

'வாழும் இறைவனின் பணியாளர்களும் இறைவாக்கினர்களும்' என்பது இத்தியானத்தின்  தலைப்பாகும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.