2015-03-14 15:14:00

தவக்காலம் 4ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


மார்ச் 13, இவ்வெள்ளியன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் தலைமைப் பணியில் ஈராண்டுகளை நிறைவு செய்துள்ளார். இந்த ஈராண்டுகளை அவர் 'வெற்றிகரமாக' நிறைவு செய்தார் என்று சொல்வதைவிட, 'பொருளுள்ள வகையில்' நிறைவு செய்தார் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.

திருத்தந்தையின் ஈராண்டு தலைமைப்பணியைப் பற்றி பல செய்திதாள்கள் கடந்த பத்து நாட்களாக கட்டுரைகளை வெளியிட்டுவந்துள்ளன. இக்கட்டுரைகளை அலசினால், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பணியைக் குறித்து ஓர் உண்மை மீண்டும், மீண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுதான், மாற்றம்.

தவக்காலத்தின் உயிர் நாடியாக விளங்கும் கருத்தும், மாற்றம்தானே! வெளிப்புற மாற்றம் அல்ல, உள்ளார்ந்த மாற்றம். மனமாற்றம், அதன் விளைவாக உருவாகும் வாழ்வு மாற்றம்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களையும், மாற்றத்தையும் இணைத்து சிந்திக்கும்போது, அவர் வத்திக்கானிலும், திருஅவையிலும், ஏன்... இன்னும் சொல்லப்போனால், உலக அரசுகளிலும், வர்த்தக உலகிலும், உலக அவைகளிலும் 'மாற்ற அலைகளை' உருவாக்கி வருகிறார் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அவர் உருவாக்கிவரும் வெளிப்புற மாற்றங்களை விட, மனிதர்கள் மனதில் அவர் உருவாக்கியுள்ள ஆழமான தாக்கங்களும், அவற்றின் விளைவாக அவர்கள் வாழ்வில் உருவாகியுள்ள மாற்றங்களும் திருத்தந்தையின் ஈராண்டு பணியின் முக்கியத் தாக்கம் என்று சொல்வதில் எனக்கு எவ்விதத் தயக்கமும் இல்லை.

பணியேற்ற இரு வாரங்களுக்குப் பின்னர், அதாவது, 2013ம் ஆண்டு, மார்ச் 28ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் நகரில் Casal del Marmo என்ற பெயர் கொண்ட வளர் இளம் கைதிகள் இல்லத்தில், புனித வியாழன் மாலைத் திருப்பலியை நிறைவேற்றினார். அங்கு, இரு பெண் கைதிகள் உட்பட, 12 வளர் இளம் கைதிகளின் காலடிகளைக் கழுவி முத்தமிட்டார். இச்செய்தியை, அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில், Los Angeles நகரில் உள்ள வளர் இளம் கைதிகள் கேள்வியுற்றனர். அவர்களில் பலர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு மடல்களை அனுப்பி வைத்தனர்.

தங்களைப் போன்ற கைதிகளை மனிதர்களாக மதித்தது மட்டுமல்லாமல், அவர்கள் காலடிகளைக் கழுவி, அவர்களுக்குப் பணிவிடை செய்த திருத்தந்தையை எண்ணி, உள்ளம் நெகிழ்ந்து எழுதப்பட்ட மடல்கள் இவை. இளம் கைதிகள் எழுதியுள்ள மடல்களில் சில:

அன்புத் திருத்தந்தை பிரான்சிஸ்,

என்னைப் போல், இத்தாலியில் சிறையில் இருக்கும் இளையோரின் காலடிகளை நீங்கள் கழுவியதற்காக நன்றி. தவறு செய்த எங்கள் மீது இந்த சமுதாயம் நம்பிக்கை இழந்துவிட்டது. ஆனால், நீங்கள் எங்கள் மீது நம்பிக்கை இழக்கவில்லை. மிக்க நன்றி.

அன்புத் திருத்தந்தை பிரான்சிஸ்,

நான் வாழ்ந்த வாழ்வைப் போல நீங்களும் வாழ்ந்தீர்களா என்று எனக்குத் தெரியாது. போதைப் பொருளும், வன்முறையும் நிறைந்த ஒரு காட்டில் நான் வளர்ந்தேன். என் கண்முன்னே ஏழுபேர் கொல்லப்பட்டதை பார்த்திருக்கிறேன். நானும் பலமுறை காயப்பட்டிருக்கிறேன்.

இளவயதில் இத்தனை வன்முறைகள் நடுவில் வாழ்வது மிகவும் கடினம். ஒருநாள், நானும் இங்கிருந்து விடுதலை பெறுவேன். அப்போது, நீங்கள் செய்வதுபோல், நானும் மற்ற இளையோருக்கு உதவி செய்ய ஆசைப்படுகிறேன். அதற்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

அன்புத் திருத்தந்தை பிரான்சிஸ்,

என்னைப் போன்ற ஓர் இளைஞனின் காலடிகளை நீர் கழுவுகின்றீர். போதைப் பொருளுக்கு அடிமையானவன் நான். தற்போது அதிலிருந்து விடுதலை பெற முயன்று வருகிறேன். நீங்கள் எனக்கு நம்பிக்கை அளித்துள்ளீர்கள். இப்பழக்கத்தைக் கைவிடவும், போதைக்கு அடிமையான மற்றவர்களைக் காப்பாற்றவும் நான் முயற்சிகள் எடுப்பேன்.

தான் மாறியதோடு மட்டுமல்லாமல், மற்றவர்களையும் மாற்ற முடிவெடுக்கும் வண்ணம் இந்த இளையோர் கூறிய வார்த்தைகள், தவக்காலத்தில் நாம் சிந்தித்து வரும் மனமாற்றத்தின் அழகிய பரிமாணத்தைக் காட்டுகிறது. இத்தகைய மாற்றத்திற்கு வழிவகுத்தது, திருத்தந்தையின் பணிவும், அன்பும் என்று எண்ணி மகிழ்கிறோம். உள்ளார்ந்த அன்பு, உண்மையான மாற்றங்களைக் கொணரும் என்பதை, அருள்பணி அந்தனி டிமெல்லோ அவர்களின் சிறுகதை இவ்வாறு சொல்கிறது:

"நீ மாறவேண்டும், மாறவேண்டும்" என்ற சொற்களை மீண்டும், மீண்டும் கேட்டுவந்த ஓர் இளைஞர், எப்படி மாறுவது என்று தெரியாமல் குழம்பிப்போனார். மற்றவர்கள் எதிர்பாக்கும் மாற்றங்கள் தன்னிடம் உருவாகவில்லையே என்ற ஏக்கத்தில், இன்னும் மோசமாக மாறினார்.

அவர்மீது ஆழ்ந்த அன்பு கொண்டிருந்த ஓர் இளம்பெண்ணும், "நீ மாறவேண்டும்" என்ற பல்லவியை நாள்தோறும் பாடி வந்தது, இளைஞரை மேலும் விரக்தி அடையச் செய்தது. ஒருநாள், அந்த இளம்பெண் இளைஞரிடம் வந்து, "நீ இப்போது இருப்பதுபோலவே எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது. நீ மாறவேண்டாம்" என்று சொன்னார். இதைக் கேட்ட இளைஞரின் உள்ளத்திலிருந்த இறுக்கங்களும், ஏக்கங்களும் மறைந்தன.

அவர் மாறத் துவங்கினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாண்டு ஏப்ரல் 2ம் தேதி, உரோம் நகரில் உள்ள Rebbibia சிறையில் உள்ள கைதிகளைச் சந்திக்கிறார். (திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் அவர்களை, துப்பாக்கியால் சுட்ட Mehmet Ali Ağca அவர்களை, 1983ம் ஆண்டு, திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் அவர்கள் இதே சிறையில் சந்தித்தார்.) பின்னர், சிறையில் இருக்கும் ஆண், பெண் கைதிகளுக்கு புனித வியாழன் திருப்பலியை நிகழ்த்தி, இருபால் கைதிகளில் 12 பேரின் காலடிகளைக் கழுவுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ். ஈராண்டுகளுக்கு முன் வளர் இளம் கைதிகளின் காலடிகளைக் கழுவி, அவர்களில் பலருக்கு மாற்றங்களை உருவாக்கியத் திருத்தந்தை, இம்முறை, வயது வந்த கைதிகளின் மனங்களிலும் மாற்றங்களை உருவாக்குவார் என்பதை நம்பலாம்.

சிறையில் இருப்பவர்களிடம் நல்ல மாற்றங்கள் நிகழாது என்ற நமது முற்சார்பு எண்ணங்களை (prejudice), வளர் இளம் கைதிகள் மாற்றியுள்ளனர். அதேபோல், Rebbibia சிறைக் கைதிகளிடமும் மாற்றங்கள் உருவாகும் என்ற நம்பிக்கையுடன், நம் சிந்தனைகளைத் தொடர்வோம்.

உரோம், மற்றும் Los Angeles நகர் வளர் இளம் கைதிகளிடம் வெளிப்பட்ட மாற்றங்களையும், Rebbibia கைதிகளிடம் உருவாகும் மாற்றங்களையும் சிந்திக்கும்போது, மற்றொரு சிறையில் உருவான மாற்றங்கள் என் நினைவுக்கு வருகின்றன. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஒரு சிறைக்கூடத்தில் நடைபெற்ற மாற்றத்தைப் பற்றி NYTimes என்ற இணையதளத்தில் நான் வாசித்த செய்தி அது.

அச்சிறைக்கூடத்தில் உள்ளவர்கள் அனைவரும் கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு, கடுங்காவல் சிறைத்தண்டனை அனுபவிப்பவர்கள். அவர்களில் ஒருவர் Sacel Montgomery. போதைப்பொருளுக்கு அடிமையாகிவிட்ட Montgomery அவர்கள், போதைப்பொருள் வாங்க பணம் கேட்டபோது, அதைத் தரமறுத்த தன் அண்ணியை பல முறை கத்தியால் குத்தி, கொலை செய்தவர். 25 ஆண்டுகளாக அந்தக் கடுங்காவல் சிறையில் இருக்கிறார். சிறையிலும் பலமுறை காவல் துறையினரோடும், மற்ற கைதிகளுடனும் கைகலப்பில் ஈடுபட்டவர். சிறையில் ஒருமுறை இவரிடமிருந்து போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

இந்நிலையில் இருந்த அவரிடம், சிறை அதிகாரிகள் ஒரு பொறுப்பைக் கொடுத்தனர். அவருக்கு மட்டுமல்ல... சிறையில், நல்ல உடல் நிலையில் இருந்த பலருக்கும் அந்தப் பொறுப்பு கொடுக்கப்பட்டது. அதே சிறையில் பல ஆண்டுகளாக அடைபட்டிருக்கும் ஒரு சில கைதிகள், Alzheimer's எனப்படும் நினைவுமறதி நோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யும் பொறுப்பு Montgomery அவர்களுக்கும், மற்ற கைதிகளுக்கும் கொடுக்கப்பட்டது. நோயுற்ற கைதிகளுக்கு, உணவூட்டுதல், குளிப்பாட்டுதல், சக்கர நாற்காலியில் வைத்து அவர்களைத் தள்ளிச் செல்லுதல் என, பல உதவிகளை இவர்கள் செய்தனர். அந்தப் பணிகளால் சிறைக் கைதிகள் மத்தியில் உருவான தோழமை, அந்தச் சிறைக்கூடத்தில் வளர்ந்துவந்த மகிழ்வு, அமைதி இவற்றைப் பற்றி அந்தச் செய்தி விளக்கமாகக் கூறியிருந்தது.

அந்தச் செய்தியைப் படித்ததும், மற்றோர் எண்ணமும் எனக்குள் எழுந்தது. இன்றைய நற்செய்தியுடன் தொடர்புள்ள எண்ணம் அது. குற்றங்களைக் குறைப்பதற்கு, குற்றம் புரிந்தவர்களை மீண்டும் இயல்பு வாழ்வில் இணைப்பதற்கு, சட்டங்கள், சிறைகள், தண்டனைகள் சரியான வழி அல்ல. தண்டனைகள் ஒருவரது வாழ்வில் தற்காலிகமான மாற்றங்களை, மேலோட்டமான மாற்றங்களை உருவாக்கலாம். சிறைக்கூடங்களில் உருவாகும் பரிவும், பாசமும் எத்தனையோ குற்றவாளிகளில் நிரந்தரமான மாற்றங்களை உருவாக்கி, அவர்களை மீண்டும் மனிதர்களாக்கியிருப்பதை நாம் அறிவோம். அத்தகைய மாற்றம், அவர்கள் வாழ்வை மீட்கும் வல்லமை பெற்றது.

மீட்பு என்றதும் சட்டப்படி தண்டனையிலிருந்து தப்பிப்பதை மட்டும் சொல்லவில்லை. சிலசமயங்களில், சிறையிலிருந்து விடுதலை கிடைக்காவிட்டாலும், சிறைக்குள்ளேயே அவர்கள் வாழ்வு பெருமளவு மாறியுள்ள உண்மைகளும் நாம் அறிந்ததே. இந்த வாழ்வு மாற்றம் அவர்களுக்குள்ளிருந்தே வரலாம். அல்லது, வெளியில் இருந்து வரலாம். வெளியிலிருந்து, பார்வையாளராக, அல்லது ஆலோசனை வழங்கும் நிபுணராகச் சென்று ஆயிரமாயிரம் போதனைகளை ஒருவர் தரும்போது, சிறைக்குள் இருப்பவர்கள் வெளிப்படுத்தும் எண்ணம் இவ்விதம் ஒலிக்கும்: "வெளியில இருந்துகிட்டு இப்படி பேசுறது ஈசிங்க... நாங்க இருக்கிற நிலையில நீங்க இருந்து பாருங்க, அப்பத் தெரியும், எங்கப் பிரச்சனை, போராட்டம் எல்லாம்" என்று.

வெளியிலிருந்து வரும் போதனைகளால் பயனில்லை. சரி. வேறு வழி என்ன? மற்றொரு வழியை நான் கற்பனையில் இப்படிப் பார்க்கிறேன். குற்றமற்ற ஒருவர், சிறைப்பட்டோரைத் திருத்தவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் சிறை வாழ்வைத் தேர்ந்தெடுத்து, அவர்களில் ஒருவராக, கைதியாக வாழ முன்வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர்களில் ஒருவராகவே மாறிவிட்ட அவர், கைதிகள் மீது அன்பும், பாசமும் காட்டி அவர்களை நல்வழிப்படுத்த முடியும். இதை நாம் கற்பனையில் பார்க்கலாம். நடைமுறையில், சட்ட ரீதியாக இது சாத்தியமா என்று தெரியவில்லை.

இதையொத்த ஓர் உண்மை, நம் மீட்பு வரலாற்றில் சாத்தியமானது. பாவங்களால் சிறைப்பட்ட உலகை மீட்பது எப்படி என்று கேள்வியும், பரிதவிப்பும் எழுந்தபோது, இறைவன் அதற்கு விடை பகர்ந்தார். மனிதரின் மீட்பு மனிதரிடமிருந்தே வர வேண்டும் என்று தீர்மானித்தார். தன் மகனை மனிதரில் ஒருவராக அனுப்பி வைத்தார். இந்த எண்ணத்தை வெளிப்படுத்தும் ஒரு விவிலிய வாக்கியம் இன்று நமது நற்செய்தியில் உள்ளது. “தம் ஒரே மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்.” (யோவான் 3: 16)

விவிலியத்தின் வாக்கியங்கள் கோடான கோடி வழிகளில் மேற்கோள்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. சிறப்பாக, நான்கு நற்செய்திகளின் ஒவ்வொரு வாக்கியமுமே மேற்கோள்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வாக்கியங்களிலேயே மிக அதிக அளவில் மேற்கோளாகப் பயன்படுத்தப்பட்டுள்ள ஒரு வாக்கியம் உள்ளது  என்றால், அது நாம் இப்போது வாசித்த யோவான் 3: 16 என்று உறுதியாகச் சொல்லலாம். இந்த வாக்கியம் "நற்செய்திகளின் நற்செய்தி" (Gospel of the gospels) என்று சொல்லப்படுகிறது. அன்பின் ஆழத்தைச் சொல்லும் ஓர் இலக்கணம் இது.

அன்பின் ஆழத்தைக் கூறும் பல நூறு கதைகளைக் கேட்டிருக்கிறோம். இந்தக் கதைகளில் சொல்லப்படுவது எல்லாம் ஒரு சில நாட்களில், மணித்துளிகளில் காட்டப்படும் ஆழமான அன்பு உணர்வுகள். இந்த உணர்வுகள் உண்மையானவை, உன்னதமானவைதான். ஆனால், கலிபோர்னியா சிறையில் ஒவ்வொரு நாளும், திரும்பத் திரும்ப நிகழும் அன்புச்செயல்கள் கதைகளாக நம் கவனத்தை ஈர்ப்பதில்லை. அதேபோல், அன்பை வெளிப்படுத்தும் எத்தனையோ நிகழ்வுகள் நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒவ்வொரு நாளும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இவை கதைகளாக வெளிவருவதில்லை.

எனவே, நமக்கு வெளியில் நடக்கும் கதைகளைக் கேட்பதற்குப் பதில், நாம் இந்த நாளில் நேரம் ஒதுக்கி, நமக்குள் நடக்கும்  அன்றாட நிகழ்வுகளை அசைபோடுவோம். நமது குடும்பங்களில் ஒவ்வொரு நாளும் நடக்கும் இந்தச் சின்னச் சின்ன நிகழ்வுகளில் சொல்லாமல் சொல்லப்படும் உன்னத அன்பு உணர்வுகளை இன்று அசைபோடுவோம்.

பல குடும்பங்களில், உடல்நலம், மனநலம் குன்றிய குழந்தைகள், வாழ்க்கைத்துணை, பெற்றோர் என்று எத்தனையோ பேருக்கு, 10,20,30 என்று பல ஆண்டுகள், ஒவ்வொரு நாளும் தாய், தந்தை, கணவன், மனைவி, உடன்பிறந்தோர் என்று ஒவ்வொருவரும் செய்யும் பணிகள் அற்புதமானவை. அவற்றை, பணிகள் என்றுகூட அவர்கள் கருதுவதில்லை... கூறுவதில்லை. பல ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் நிகழ்ந்துவரும் இந்த அன்பு வேள்வியில் தங்களையே தகனப்பலியாக்கும் ஆயிரமாயிரம் அன்பு இதயங்களுக்காக இறைவனிடம் இன்று சிறப்பாக நன்றி சொல்வோம். “தம் ஒரே மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்.” (யோவான் 3: 16) என்ற "நற்செய்திகளின் நற்செய்தியை" தங்கள் வாழ்வின் வழியே பறைசாற்றும் இந்த அன்பு உள்ளங்களுக்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம்.

உலகெங்கும் பரவியுள்ள 122 கோடிக்கும் அதிகமான கத்தோலிக்கர்களின் தலைவர் என்ற பெருமையைவிட, தன் எளிய குணத்தால், மதம், இனம், மொழி என்ற அனைத்து எல்லைகளையும் தாண்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல கோடி மக்களின் மனங்களில் இடம்பிடித்து, அவர்கள் வாழ்வில் மாற்றங்களை உருவாக்கிவருகிறார். இதுதான், இவர் வழியே, இறைவன் இவ்வுலகிற்கு வழங்கியுள்ள அற்புதக் கொடை. இத்தகைய மாற்றங்களை உருவாக்குவதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்னும் பல ஆண்டுகள், தன் தலைமைப் பணி,யை நல்ல உடல் நலத்துடன் தொடர, இறைவனை இறைஞ்சுவோம்.

ஞாயிறு சிந்தனை நிகழ்ச்சியை உங்களுக்கு வழங்கியது வத்திக்கான் வானொலி.








All the contents on this site are copyrighted ©.