2015-07-18 15:34:00

சுரங்க வேலைகளில் ஊழல் ஒழிக்கப்பட வத்திக்கான் அழைப்பு


ஜூலை,18,2015. சுரங்கத் தொழில்களில் வன்முறை, ஊழல் மற்றும் சூற்றுச்சூழல் மாசுகேடு ஒழிக்கப்படுமாறு வத்திக்கான் கருத்தரங்கு ஒன்றில் அழைப்பு விடுக்கப்பட்டது.

“இறைவனோடு ஒன்றிணைந்து அழுகுரலைக் கேட்கிறோம்” என்ற தலைப்பில், உரோம் சலேசியானம் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் மூன்று நாள் அனைத்துலக கருத்தரங்கில் உரையாற்றிய கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், மனிதர்களுக்கு வழங்கப்பட வேண்டிய முக்கியத்துவம் மறுக்கப்படுகின்றது என்று கவலை தெரிவித்தார்.

சுரங்க உரிமையாளர்கள், சுற்றுச்சூழலுக்குச் சீரமைக்க முடியாத சேதங்களை ஏற்படுத்துவதோடு, தலைமுறை தலைமுறையாக வாழும் மக்களின் நிலங்களையும் சுரண்டுகின்றனர் என்று இக்கருத்தரங்கில் உரையாற்றிய அருள்பணி தாரியோ போசி அவர்கள், சட்டத்திற்குப் புறம்பேயான நடவடிக்கைகள், வன்முறை, ஊழல் மற்றும் மனித உரிமை மீறல்களிலும் இவர்கள் ஈடுபடுகின்றனர் என்று குறை கூறினார்.

இலத்தீன் அமெரிக்க திருஅவைகளின் சுரங்கப்பணி கூட்டமைப்பின் ஒத்துழைப்போடு திருப்பீட நீதி மற்றும் அமைதி அவை இக்கருத்தரங்கை நடத்தி வருகிறது. இஞ்ஞாயிறன்று நிறைவடையும் இக்கருத்தரங்கில் ஆசியா, ஆப்ரிக்கா, அமெரிக்கா ஆகிய கண்டங்களில், சுரங்க வேலைகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.  

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.