2015-08-27 15:42:00

'ஹையான்' சூறாவளி - காரித்தாஸ் அமைப்பின் 2வது கட்டப் பணிகள்


ஆக.27,2015. பிலிப்பின்ஸ் நாட்டைத் தாக்கிய 'ஹையான்' அல்லது 'யொலாண்டா' சூறாவளிப் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, காரித்தாஸ் அமைப்பு தன் இரண்டாவது கட்டப் பணிகளைத் துவக்கியுள்ளது.

2013ம் ஆண்டு, நவம்பர் மாதத் துவக்கத்தில், பிலிப்பின்ஸ் நாட்டில் வீசிய மிக சக்தி வாய்ந்த சூறாவளியால் பாதிக்கப்பட்டோருக்கு கடந்த ஈராண்டளவாக, காரித்தாஸ் பிறரன்பு அமைப்பு, வீடுகளைக் கட்டிக்கொடுத்து வந்தது.

தற்போது, பாதிக்கப்பட்டோருக்கு தொழில் திறமைகளையும், பேரிடர்களைச் சமாளிக்கும் திறமைகளையும் தன் இரண்டாம் கட்ட நடவடிக்கையாக, காரித்தாஸ் அமைப்பு வழங்க ஆரம்பித்துள்ளது என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

REACH என்ற புனைப்பெயருடன் இயங்கிவரும் இந்த முயற்சியால், 1,84,750 பேர் பயனடைய உள்ளனர் என்றும் காரித்தாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.

ஹையான் சூறாவளியால் பாதிக்கப்பட்டோருக்கு, பிலிப்பின்ஸ் தலத்திருஅவை, இதுவரை இல்லாத அளவு, 817,000,000 pesos அதாவது, 1,90,00000 டாலர்கள் மதிப்புள்ள நிதி உதவி செய்துள்ளதென்று Fides செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.