2015-09-11 16:16:00

ஐரோப்பிய ஆயர் பேரவைகள் மத்தியக் குழு - திருத்தந்தை வாழ்த்து


செப்.11,2015. ஐரோப்பாவின் பல நாடுகளிலிருந்தும் புனித பூமியில் கூடியுள்ள சகோதர ஆயர்களின் கூட்டம், அனைத்திற்கும் மேலாக, ஆழ்ந்த செபத்தையும், ஒருங்கிணைப்பையும் உணரும் நேரமாக அமையவேண்டும் என்ற வாழ்த்துக்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் CCEE எனப்படும் ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் மத்தியக் குழுவுக்கு அனுப்பியுள்ளார்.

செப்டம்பர் 11, இவ்வெள்ளி முதல், 16, வருகிற புதன் முடிய எருசலேம் நகரில் கூடியுள்ள ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் மத்தியக் குழுவின் தலைவர், கர்தினால் Péter Erdő அவர்களுக்கு அனுப்பியுள்ள இச்செய்தியில், ஐரோப்பிய ஆயர்கள் மேற்கொண்டுள்ள இக்கூட்டம், வருகிற ஆயர் மாமன்றத்திற்கு தகுந்ததொரு முன்னேற்பாடாக இருக்கும் என்று தான் நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை, Fouad Twal அவர்கள் விடுத்திருந்த அழைப்பின் பேரில், புனித பூமியில், முதல்முறையாகக் கூடியுள்ள ஐரோப்பிய ஆயர்கள், ஐரோப்பிய,  கிறிஸ்தவக் கலாச்சாரத்தின் ஆணிவேரான கிறிஸ்து வாழ்ந்த பூமியில் முதல்முறையாக தங்கள்  கூட்டத்தை நடத்துகின்றனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தின்போது, ஐரோப்பிய ஆயர்கள், பெத்லகேமிலும், கிறிஸ்துவின் கல்லறை பசிலிக்காவிலும் திருப்பலி நிகழ்த்துவர் என்றும், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன அதிகாரிகளைச் சந்தித்துப் பேசுவர் என்றும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.