2015-11-25 16:35:00

திருப்பீடம் சகிப்புத்தன்மையையும் ஒப்புரவையும் ஊக்குவிக்கிறது


நவ.25,2015. நாடுகள் மற்றும் பல்வேறு இனங்கள் மத்தியில் ஒப்புரவு, சகிப்புத்தன்மை மற்றும் நட்புறவை ஊக்குவிப்பது குறித்து திருப்பீடம் உரைகள் ஆற்றுவதோடு நின்றுவிடாமல், அவற்றைச் செயல்படுத்தும் வழிகளிலும் ஈடுபட்டு வருகிறது என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் கூட்டங்களில் திருப்பீடத்தின் சார்பில் நிரந்தரப் பார்வையாளராகப் பங்கேற்கும் பேராயர் சில்வானோ தொமாசி அவர்கள், இனப் பாகுபாடு ஒழிப்பது ஒப்பந்தம் குறித்த ஐ.நா குழுவுக்கு இச்செவ்வாயன்று சமர்ப்பித்த ஓர் அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார்.

உலகெங்கும், துறவற சபைகளும், பங்குகளும் நடத்தும் எண்ணற்ற பள்ளிகள் வழியாக  கத்தோலிக்கத் திருஅவை, இனம், மதம், நாடு என்ற பாகுபாடின்றி அனைவரின் உரிமையை ஊக்குவித்து வருகின்றது என்பதை எடுத்துக்காட்டாகக் கூறினார், பேராயர் தொமாசி.

கல்வி கற்பதற்கும், தொழிற்பயிற்சி பெறுவதற்கும், ஒவ்வொருவருக்கும் இருக்கும் உரிமைகளை ஊக்குவித்து வருவதோடு, கத்தோலிக்கப் பள்ளிகள், சமத்துவத்தையும் ஊக்குவித்து வருகின்றன என்பதையும் சுட்டிக்காட்டினார் பேராயர் தொமாசி.

கத்தோலிக்கரும், கத்தோலிக்கத் திருஅவையோடு தொடர்புடைய நிறுவனங்களும் நலப்பணியில் எவ்விதப் பாகுபாடும் இன்றி செயலாற்றி வருவதையும் ஐ.நா. கூட்டத்தில் குறிப்பிட்டார் பேராயர் தொமாசி.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.