2016-01-19 15:35:00

எருசலேம் கிறிஸ்தவர்களுக்கு எதிராக யூத தீவிரவாத குழு மிரட்டல்


சன.19,2016. எருசலேமின் கத்தோலிக்க துறவு இல்லம் ஒன்றின் சுவர்களில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வார்த்தைகளை எழுதி, அச்சுறுத்தலை வழங்கியுள்ளது யூதத் தீவிரவாத குழு ஒன்று.

'இஸ்ரயேலின் எதிரிகளான கிறிஸ்தவர்களுக்கு சாவு' என்ற வார்த்தைகளை, எருசலேமின் பெனடிக்ட் துறவு சபை இல்ல வெளிச்சுவரில் எழுதியுள்ள இக்குழு, 'இயேசுவின் பெயரும் நினைவுகளும் அழிக்கப்படும்',  'கிறிஸ்தவர்கள் பாதாளத்தில் தள்ளப்படுவார்கள்', 'இஸ்ரயேல் புதல்வர்களின் பழிவாங்கல் தொடங்கிவிட்டது'  எனவும் சுவர்களில் எழுதி தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

கடந்த சனிக்கிழமையன்று இரவு நடத்தப்பட்ட இந்த எழுத்துப் போரைத் தொடர்ந்து,  அண்மையிலுள்ள கிரேக்க ஆர்த்தடாக்ஸ் மற்றும் அர்மீனிய கிறிஸ்தவ சபை கல்லறைத் தோட்டமும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக பெனடிக்ட் துறவு இல்ல அதிபர் அருள்பணியாளர் Nikodemus Schnabel  அறிவித்தார்.

யூத வலதுசாரி தீவிரவாத அமைப்பின் அங்கத்தினர்கள், கடந்த மூன்று ஆண்டுகளாக, தாவீதின் கல்லறையின் அருகேயுள்ள துறவு இல்லத்திற்கு மிக அருகில் ஒலி பெருக்கிகள் மூலம் பாடல்களை இசைத்து, ஒவ்வொரு சனிக்கிழமை இரவும் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார் அருள் பணி Schnabel.

இதற்கிடையே, கிறிஸ்தவர்களுக்கு எதிரான வார்த்தைகளை துறவு இல்லச் சுவர்களில் எழுதியவர்கள், உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என இஸ்ரயேல் அரசு உறுதியளித்துள்ளது. 

ஆதாரம் : Catholic Culture/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.