2016-02-12 16:39:00

வத்திக்கான் வானொலிக்கு வயது 85


பிப்.12,2016. வத்திக்கான் வானொலி உருவாக்கப்பட்டதன் 85வது ஆண்டு நிறைவு, பிப்ரவரி 12, இவ்வெள்ளியன்று சிறப்பிக்கப்பட்டது.

வானொலியைக் கண்டுபிடித்த குல்யெல்மோ மார்க்கோனி அவர்களால் வடிவமைக்கப்பட்ட வத்திக்கான் வானொலி, 1931ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி தனது முதல் ஒலிபரப்பைத் தொடங்கியது.

திருத்தந்தை 11ம் பத்திநாதர் அவர்களின் நண்பராகிய மார்க்கோனி அவர்கள், முதலில் ஒலிவாங்கியின் முன்நின்று, இன்னும் சில நொடிகளில், திருத்தந்தை 11ம் பத்திநாதர் அவர்கள், வத்திக்கான் நகர நாட்டின் வானொலி நிலையத்தை ஆரம்பித்து வைப்பார் என்பதை அறிவிப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன், வானொலியின் மின் அலைகள் உலகமனைத்திற்கும் திருத்தந்தையின் அமைதி மற்றும் ஆசிர்வாதம் நிறைந்த வார்த்தைகளை ஒலிபரப்பும் என்று அறிவித்தார்.

பின்னர், திருத்தந்தை 11ம் பத்திநாதர் அவர்களும், 1931ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி 16.49 மணிக்கு இலத்தீனில் நற்செய்தியை வாசித்தார். வானங்களே நான் சொல்வதைக் கேளுங்கள், பூமியே என் வாயிலிருந்து வரும் வார்த்தைகளைக் கேளுங்கள், தூர இடங்களில் வாழும் மக்களே, கேளுங்கள் என்று அந்தப் பகுதியை நிறைவு செய்தார் திருத்தந்தை. தற்போது புதிய தொழில்நுட்பப் பாதைகளில் 46 மொழிகளில் தனது ஒலிபரப்பை தினமும் நடத்திக்கொண்டிருக்கின்றது வத்திக்கான் வானொலி.

பிப்ரவரி 13, உலக வானொலி தினம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.