2016-02-14 14:22:00

குவாதலூப்பே திருத்தலத்தில் திருத்தந்தை வழங்கிய மறையுரை


பிப்.14,2016. அன்பு சகோதர, சகோதரிகளே,

தன் உறவினராகிய எலிசபெத்தைச் சந்திக்கச் சென்ற அன்னை மரியாவைப் பற்றி இப்போது வாசிக்கக் கேட்டோம். வானதூதரைச் சந்தித்த மரியா, தன்னை, பேறுபெற்றவர் என்று கருதி, தனக்குள்ளேயே தங்கி, பெருமை பாராட்டவில்லை. வானதூதருக்கு அவர் தந்த 'ஆம்' என்ற மறுமொழி, தன் சகோதர, சகோதரிகளுக்கும், 'ஆம்' என்று சொல்ல வைத்தது.

யூதேயா, கலிலேயா பகுதிகளில் அன்னை மரியா நடந்து சென்றுள்ளதைப் போலவே, மெக்சிகோவின், தெபெயாக் (Tepeyac) பகுதியிலும் நடந்து சென்றுள்ளார் என்பதை, இந்த குவாதலூப்பே திருத்தலத்தில் நாம் உணர்கிறோம்.

இடையாரான ஹுவான் தியேகோ (Juan Diego)விற்கு முன் தோன்றி, அவருடன் துணை சென்ற மரியன்னை, மெக்சிகோ மக்கள் ஒவ்வொருவரோடும் துணை செல்கிறார். தான் 'பயனற்றவர்' என்றுணர்ந்த ஹுவானைத் தேற்றியதுபோல, பயனற்றவர் போல் உணரும் அனைத்து மெக்சிகோ மக்களையும் தேற்றுகிறார்.

மனம் தளர்ந்துபோன ஹுவானுக்கு, 1531ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற முதல் புதுமையின் வழியே, வாழ்வில் புத்துணர்வு தந்ததுபோல், நம் அனைவருக்கும் குவாதலூப்பே அன்னை புத்துணர்வு ஊட்டுகிறார்.

இறை இரக்கத்தைப் பறைசாற்றும் இந்தத் திருத்தலத்தை எழுப்ப தான் தகுதியற்றவன் என்பதை எடுத்துச் சொன்ன ஹுவானை, இந்தப் பெரும் பணிக்கென, அன்னை மரியா தேர்ந்தெடுத்தார். இத்திருத்தலத்திற்கு வருகை தந்துள்ள நம் அனைவருக்கும், இதே எண்ணங்களை அன்னை மரியா அளிக்கிறார். நமது துயரம், அச்சம், நம்பிக்கையின்மை, சோகம் அனைத்தையும் களைந்து, நம்மை உருமாறச் செய்கிறார்.

நம் தாயாக இருப்பதை தன் பெருமை என்று எண்ணும் அன்னை மரியாவின் மேலாடையில் நாமும் ஓர் இடம் பெறுவோம் என்று அவர் உறுதியளிக்கிறார். நமது துயரங்களைக் களைந்து, மீண்டும் ஒருமுறை நாம் இவ்வுலகில் நம்பிக்கையோடு நடைபோட அவர் நமக்கு உதவியளிக்கிறார்.

'என் திருத்தலத்தைக் கட்டுவதற்குச் செல்' என்று அன்னை மரியா புனித ஹுவான் தியேகோவிடம் சொன்னதுபோல், நம்மிடமும் சொல்கிறார். நம் சகோதர, சகோதரிகளின் வாழ்வைக் கட்டியெழுப்பும்படி அவர் நம்மிடம் கேட்கிறார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.