2016-03-02 15:49:00

'ஆஸ்கர்' விருதுபெற்ற 'ஸ்பாட்லைட்' குறித்து கர்தினால் ஒ'மாலி


மார்ச்,02,2016. அருள்பணியாளர்களால் சிறுவர் சிறுமியர் பாலினக் கொடுமைகள் அடைந்ததை ஊடகங்கள் வெளிக்கொணர்ந்தபோது, அது, தகுந்ததொரு பதிலிறுப்பை மேற்கொள்ள திருஅவைக்கு உதவியது என்று, அமெரிக்க ஐக்கிய நாட்டின் பாஸ்டன் பேராயர், கர்தினால் ஷான் ஒ'மாலி (Seán O’Malley) அவர்கள் கூறினார்.

சிறுவர், சிறுமியர் அடைந்த துன்பங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த 'ஸ்பாட்லைட்' (Spotlight) என்ற திரைப்படம், இஞ்ஞாயிறன்று நடைபெற்ற 'ஆஸ்கர்' திரைப்பட விருதுகள் விழாவில், சிறந்த படம் என்ற விருதைப் பெற்றதையடுத்து, கர்தினால் ஒ'மாலி அவர்கள் செய்தியாளர்களுக்கு வழங்கிய ஓர் அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார்.

'த பாஸ்டன் குளோப்' (The Boston Globe) என்ற நாளிதழ், அருள் பணியாளர்களின் இந்தக் குற்றத்தை வெளிச்சத்திற்குக் கொணர்ந்ததை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்த இத்திரைப்படம், நடுநிலையோடு இந்தப் பிரச்சனையைக் கையாண்டுள்ளது என்று, கர்தினால் ஒ'மாலி அவர்கள் கூறினார்.

கர்தினால் ஒ'மாலி அவர்கள், பாஸ்டன் பேராயராகப் பொறுப்பேற்ற வேளையில், இந்தப் பிரச்சனை உச்சக் கட்டத்தில் இருந்ததென்பதும், அவரது தலைமையின் கீழ், பாஸ்டன் உயர் மறைமாவட்டம், இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு தகுந்த முயற்சிகள் மேற்கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கன.

கத்தோலிக்கத் திருஅவையின் பணியாளர்களால் சிறுவர் சிறுமியருக்கு இழைக்கப்பட்ட தீங்கினை வெளிக்கொணர்ந்துள்ள 'ஸ்பாட்லைட்' திரைப்படம், கத்தோலிக்கத்தை வெறுக்கும்படி அமைக்கப்படாதது, இத்திரைப்படத்தின் சிறப்பு என்று, வத்திக்கான் நாளிதழ் L’Osservatore Romano கூறியுள்ளது.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.