2016-05-24 16:00:00

CEI : இலங்கை, ஈக்குவதோருக்கு 15 இலட்சம் யூரோக்கள் உதவி


மே,24,2016. இலங்கையில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால், பாதிக்கப்பட்டுள்ள இலட்சக்கணக்கான மக்களுக்கு, பத்து இலட்சம் யூரோக்கள் நிதியுதவி வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளது CEI என்ற இத்தாலிய ஆயர் பேரவை.

இத்தாலிய ஆயர் பேரவைத் தலைவரின் அலுவலகம், கொழும்பு பேராயர் இல்லத்தோடு நேரடியாகத் தொடர்புகொண்டு இந்த வெள்ள நிவாரண உதவியை வழங்கவுள்ளது. 

இலங்கையில் கடந்த வாரம் ஏற்பட்ட இயற்கைப் பேரிடரில், மூன்று இலட்சத்து ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கட்டாயமாகத் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறினர். ஆயினும், இத்திங்களன்று, பலர் தங்கள் வீடுகளுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர்.

நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால், 150 கோடி டாலர் முதல் 200 கோடி டாலர் வரை இழப்பு ஏற்பட்டிருப்பதாக, இலங்கை அரசு இத்திங்களன்று கூறியது. மேலும், இதில், 92 பேர் இறந்துள்ளனர் மற்றும் 109 பேர் காணாமற்போயுள்ளனர் என, அதிகாரபூர்வ தகவல்கள் கூறுகின்றன.

கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிப் பேரிடருக்குப் பின்னர், இலங்கை தற்போது இயற்கைப் பேரிடரால் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது.

மேலும், தென் அமெரிக்க நாடான ஈக்குவதோரில், கடந்த ஏப்ரல் 17ம் தேதி இடம்பெற்ற நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, ஐந்து இலட்சம் யூரோக்கள் நிதியுதவி வழங்குவதற்கும் தீர்மானித்துள்ளது இத்தாலிய ஆயர் பேரவை. இந்நிலநடுக்கத்தில், 1,100க்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமாயின. மேலும், 560 பள்ளிகள் பயன்படுத்தப்பட முடியாத நிலையில் சேதமாயின.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.