2016-06-10 16:02:00

திருத்தந்தை,திருப்பீடத்திற்கான செனகல் தூதர் Diouf சந்திப்பு


ஜூன்,10,2016. திருப்பீடத்திற்கான செனகல் நாட்டுத் தூதர் Léopold Diouf அவர்கள், இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து நம்பிக்கைச் சான்றிதழை சமர்ப்பித்தார்.

இன்னும்,“கண்களில் முழுவதும் அன்பை நிறைத்து, நோயாளர்க்கு உதவி, அவர்களின் தேவையைப் புரிந்துகொள்பவரின் வாழ்வில் கடவுளின் கனிவு, பிரசன்னமாக உள்ளது”என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக, இவ்வெள்ளியன்று வெளியாயின

மேலும், ஐரோப்பாவின் கத்தோலிக்க ஆலயங்களில், உக்ரைன் நாட்டிற்காகச் சிறப்பாகத் திரட்டப்பட்டுள்ள நிதியை வழங்குவதற்கு சிறப்பு குழு ஒன்றை உருவாக்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருப்பீடத்தில், இவ்வியாழனன்று வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, ஒரு தலைவர் மற்றும் நான்கு பேர் கொண்ட குழுவை திருத்தந்தை உருவாக்கியுள்ளார்.

உக்ரைன் நாட்டின் முன்னாள் அரசு, ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட மறுத்தத்தைத் தொடர்ந்து, 2013ம் ஆண்டு நவம்பரில் வன்முறை எதிர்ப்புகள் தொடங்கின. பல மாதங்கள் நீடித்த இந்த வன்முறை, 2014ம் ஆண்டு பிப்ரவரியில் வலுவடைந்தது. இதில் 6,500க்கும் மேற்பட்டோர் இறந்தனர். ஏறத்தாழ இருபது இலட்சம் பேர் புலம்பெயர்ந்தனர்.

வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டுக்கு உதவுவதற்கென, கடந்த ஏப்ரல் 24ம் தேதி ஐரோப்பாவின் கத்தோலிக்க ஆலயங்களில் சிறப்பு நிதி திரட்டுமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விண்ணப்பித்திருந்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.