2016-07-27 14:36:00

இது இரக்கத்தின் காலம் : அன்பளிப்பில் பொருள் முக்கியமல்ல


அவர் ஓர் ஆன்மீகச் சொற்பொழிவாளர். அவருடைய அந்த ஆண்டு பிறந்த நாளுக்கு, அமெரிக்காவிலிருந்து வந்திருந்த அவருடைய நண்பர் ஒருவர், பரிசுப் பொருள் ஒன்றைக் கொடுத்தார். மேலை நாடுகளில் பரிசுப்பொருள்களைக் கொடுத்தவுடன் அந்தப் பரிசு பொட்டலத்தை உடனடியாகப் பிரித்துப் பார்ப்பது வழக்கம். அந்த முறைப்படி அமெரிக்க நண்பர் காத்திருந்தார். ஆனால், இந்தியரான அந்தச் சொற்பொழிவாளர் அதைப் பிரிக்காமல் இருந்தார். அதனால் அமெரிக்க நண்பரே அந்தப் பொட்டலத்தை அவரிடமிருந்து வாங்கிப் பிரித்தார். அதில் விலையுயர்ந்த ஓர் அழகிய கைக்கடிகாரம் இருந்தது. அதைப் பார்த்த சொற்பொழிவாளர், நன்றி என்ற வார்த்தையைச் சொல்லி, உங்களை அந்நியப்படுத்த விரும்பவில்லை என்றார். அப்போது நண்பர் அவரிடம், இதை நீங்கள் உடனடியாகக் கட்டுங்கள் என்றார். இரண்டு கைக்கடிகாரங்களைக் கட்டிக்கொண்டு போனால் பார்ப்பவர்கள் சிரிக்க மாட்டார்களா என்று அவர் கேட்டார். இல்லை, பழையதை உடனே கழற்றிவிட்டு புதியதைக் கட்டுங்கள் என்று சொன்னதோடு, அவரே பழையதைக் கழற்றவும் தொடங்கினார். நான் எப்பொழுது உங்களைப் பார்த்தாலும் இந்தப் புதிய கைக்கடிகாரத்தோடுதான் நீங்கள் இருக்க வேண்டும். இதைக் கழற்றவே கூடாது, யாருக்கும் அன்பளிப்பாகக் கொடுக்கவும் கூடாது, அலமாரிக்குள் வைக்கவும் கூடாது என்று, நிபந்தனைகளை அடுக்கினார். பின்னர் ஒருநாள், தனது நண்பரின் இச்செயல் பற்றி ஆன்மீகச் சொற்பொழிவாளர் இவ்வாறு சொன்னார். அன்பளிப்பின்போது ஆளுமை செலுத்துதல் ஒருபோதும் தூய அன்பு ஆகாது. வழங்கப்பட்ட பொருள்மீதுள்ள மரியாதை, வழங்கப்பட்ட நபர் மீது இல்லை. எந்தக் கணம் பரிசு கை மாறுகிறதோ, அந்தக் கணமே அந்தப்பொருள் மீதான எல்லா உரிமைகளும் எதிர்பார்ப்பும் அழிந்துபோனால்தான் தூய அன்பு வெளிப்படும். பரிசாகக் கொடுக்கப்படும் பொருள் மீதான எல்லாப் பற்றுகளையும் விட்டுக்கொடுத்தால்தான் அது அன்பளிப்பு, இல்லையென்றால் அது பரிசளிப்பு. ஆம். இரக்கத்திற்குத் தேவை தூய அன்பு.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.