2016-07-29 15:53:00

போன்யே யோர்தான் பூங்காவில் உலக இளையோருடன் திருத்தந்தை


ஜூலை,29,2016.  ஜூலை, 26, செவ்வாயன்றே கிரக்கோவ் நகரில் உலக இளயோர் நாள் கொண்டாட்டங்கள், கர்தினால் Stanisław Dziwisz அவர்களால் அதிகாரப்பூர்வமாகத் துவக்கிவைக்கப்பட்டுள்ள போதிலும், புதனன்று போலந்து நாட்டில் தன் திருத்தூதுப்பயணத்தைத் துவக்கியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாக்கிழமை மாலையில்தான் இளையோரை முதன் முதலாக அதிகாரப்பூர்வமாகச் சந்திக்கச் சென்றார்.

போன்யேவின் யோர்தான் பூங்காவில் 5 இலட்சம் இளையோர் கூடியிருக்க, அவர்களிடையே முதலில் திறந்த காரில் வலம் வந்தார், திருத்தந்தை பிரான்சிஸ். 5 இலட்சம் இளையோர் குழுமியிருந்தாக, திருப்பீடத் தகவல் துறை தலைவர் அருள்பணி ஃபெதரிக்கோ லொம்பார்தி, அவர்களும், தலத்திருஅவை தலைவர்களும், போலந்து அரசு அதிகாரிகளும் அறிவித்துள்ளனர். ஏற்கனவே, வியாழன் காலையில் யஸ்ன கோரா திருத்தல வளாகத்தில் திருத்தந்தை நிறைவேற்றியத் திருப்பலியில் 6 இலட்சம் விசுவாசிகள் கலந்துகொண்டனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அருங்காட்சியகத்தையொட்டி அமைந்துள்ள இந்த யோர்தான் பூங்கா, 48 ஹெக்டேர் நிலப்பரப்பைக் கொண்டது. இளைஞரிடையே வலம்வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவரையும் நோக்கி கையசைத்து, ஆசீர்வதித்தார்.

திருத்தந்தையைக்கண்டதும் எழுந்த இளையோரின் மகிழ்ச்சி ஆரவாரக்குரல், அவர் மேடையேறி நாற்காலியில் அமர்ந்த பின்னரும் தொடர்ந்தது. முதலில் கிரக்கோவ் பேராயர் கர்தினார் Dziwisz அவர்கள் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார். செவ்வாயக்கிழமையன்று உலக இளையோர் நாள் கொண்டாட்டங்கள் துவங்கியதிலிருந்து, கடந்த இரு நாட்களாக இளையோரின் சந்திப்பு, செபங்கள், விசுவாச அனுபவ பகிர்வு, திரு அவையின் அங்கத்தினராக இருப்பதில் மகிழ்ச்சி என பல்வேறு விடயங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. இளையோர் உலக நாளை துவக்கி வைத்த திருத்தந்தை 2ம் ஜான்பால் பணியாற்றிய நகரில், அதுவும் இறை இரக்கத்தோடு தொடர்புடைய நகரில் இந்தக் கொண்டாட்டங்கள் இடம்பெறுவது முக்கியத்துவம் நிறைந்த ஒன்றாக இருக்கின்றது. மோதல்களாலும் வன்முறைகளாலும் பாதிக்கப்பட்டுள்ள இன்றைய உலகில், நாம், அமைதியின் மனிதர்களாக, இறை இரக்கத்தின் சாட்சிகளாக, மனிதாபிமானமும் ஒருமைப்பாடும் நிறைந்த உலகை கட்டியெழுப்புபவர்களாக இருக்க வேண்டிய தேவை உள்ளது. இதற்கு திருஅவயின் மகிழ்ச்சி நிறைந்த மேய்ப்புப்பணி நடவடிக்கைகள் தேவை என்பதை திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்கள் வலியுறுத்திக் கூறி, செயல்படுத்தியும் காட்டினார். திருத்தந்தையே, நீவிர் ஏற்கனவே உலக இளையோரின் இதயங்களை வெற்றிகண்டுள்ளீர்கள், அனைத்து உலக இளையோரும் உம்மை விரும்புகின்றனர்.  இவ்வேளையில் போலந்து நாட்டின் இளையோர், உமக்கு, தனிப்பட்ட முறையில் நன்றி கூறுகிறார்கள் என தன் வரவேற்புரையை வழங்கினார் கர்தினால்.

திருத்தந்தை அமர்ந்திருந்த மேடையின் முன், விருந்தோம்பலின் சிறப்பை வெளிப்படுத்தும் கிரக்கோவ் நகரின் பாரம்பரிய நடனமும் பல்வேறு நாடுகளின் நடனங்களும் அரங்கேறின. கிரக்கோவ் பாரம்பரிய உடையணிந்த தம்பதியர் பலர் நடனத்தைத் துவக்கிவைக்க, பல்வேறு நாடுகளின் நடனக் கலைஞர்கள் அவரவர் பாரம்பரிய உடையில் தங்கள் தேசிய நடனத்துடன், கிரக்கோவிய நடனக்கலைஞர்களுடன் கலந்துகொண்டனர். ஆப்ரிக்காவின் மோடிஃப் நடனம், அர்ஜென்டினாவின் டாங்கோ நடனம், இந்திய நடனம் என பல்வேறு நாடுகளின் நடனங்களை புன்னகை தவழும் முகத்துடன் பார்த்து இரசித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். நடன நிகழ்ச்சிக்குப்பின், ஒவ்வொரு நாட்டின் பிரதிநிதி குழுவும் தங்கள் தேசியக்கொடிகளை அசைத்த வண்ணம் மேடைக்கு முன் வலம் வந்தனர்.

இச்சந்திப்பின்போது திருத்தந்தைக்கு இளையோர் நாளுக்கென உருவாக்கப்பட்ட முதுகுப் பை ஒன்று பரிசாக வழங்கப்பட்டது. இந்த இளையோர் மாநாட்டில் கலந்து கொள்வதற்குப் பதிவுச்செய்த அனைவருக்கும் வழங்கப்பட்ட இந்தப் பையை, திருத்தந்தையும் பெற்றுக்கொண்டார், ஏனெனில் இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதாக முதன் முதலில் பதிவுச்செய்தவர் அவரே. பின்னர், இந்த முதல் சந்திப்பில், இளையோருக்கு திருத்தந்தை உரை வழங்கினார். இறுதியில் அனைவரோடும் சேர்ந்து, இயேசு கற்பித்த செபத்தை செபித்து போன்யே பூங்காவிலிருந்து விடைபெற்றார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.