2016-08-09 15:38:00

வன்முறையை முழுவதுமாக நிறுத்துவதற்கு அரசுக்கு வேண்டுகோள்


ஆக.09,2016. பாகிஸ்தானின் குவெட்டா நகர் மருத்துவமனை குண்டுவெடிப்பால் தாக்கப்பட்டுள்ளது குறித்து, தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது அந்நாட்டு கத்தோலிக்கத் திருஅவை.

இத்தாக்குதல் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள, ஃபாய்சலாபாத் ஆயரும், தேசிய நீதி மற்றும் அமைதி அவைத் தலைவருமான ஆயர் அர்ஷத் ஜோசப் அவர்கள், அரசு, குடிமக்களின் வாழ்வதற்கான உரிமைக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று விண்ணப்பித்துள்ளார்.   

கடந்த 15 ஆண்டுகளில் பலுசிஸ்தான் மாநிலம், 1,400க்கும் மேற்பட்ட வன்முறைத் தாக்குதல்களால் துன்புற்றுள்ளது என்றும், அப்பாவி மக்களைக் கொலை செய்தல், மருத்துவமனைகளை குறிவைத்து தாக்குதல் போன்றவை மனிதமற்ற செயல்கள் என்றும், கண்டனம் தெரிவித்துள்ளார் ஆயர் ஜோசப்.

பொது மக்களுடன், குறிப்பாக, அவர்களின் துன்ப நேரங்களில், கத்தோலிக்கத் திருஅவை எப்பொழுதும் உடனிருக்கின்றது என்றும் கூறியுள்ள ஆயர் ஜோசப் அவர்கள், அரசு, இந்த வன்முறைத் தாக்குதல்களை முழுவதுமாக நிறுத்துவதற்கு, உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.

பலுசிஸ்தான் மாநிலத்தில் இத்திங்களன்று நடந்த இக்குண்டுவெடிப்புத் தாக்குதல், 2016ம் ஆண்டில் இடம்பெற்ற கடும் இரத்தம் சிந்திய தாக்குதல் என்று சொல்லப்படுகின்றது.

ஆதாரம் : AsiaNews/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.