2016-08-24 17:21:00

காணாமல்போன 65,000 பேர் பற்றி புகார் அளிக்க தனி அலுவலகம்


ஆக.24,2016. இலங்கை உள்நாட்டுப் போரில் காணாமல்போனவர்கள் பற்றி புகார் அளிக்க தனி அலுவலகம் அமைக்கும் திட்டத்திற்கு, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒருமனதாக தாக்கல் செய்யப்பட்ட தீர்மானத்திற்கு சபாநாயகர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட உள்நாட்டுப் போரின்போது அப்பாவி தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். போர் முடிந்தபின், ஏறத்தாழ ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை என, தமிழ் அமைப்புகள் குற்றச்சாட்டுகளை எழுப்பி வந்தன. இச்சூழ்நிலையில், காணாமல்போனவர்கள் பற்றி அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படும் என்று, தற்போதைய அரசுத்தலைவர் அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி, காணாமல்போனோர் பதிவு அலுவலகம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில், காணாமல்போனோர் பற்றிய மசோதா இலங்கை நாடாளுமன்றத்தில் ஆகஸ்ட் 11ல் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா எந்தவித ஓட்டெடுப்பும் இல்லாமல் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இலங்கையில், 1983ம் ஆண்டு ஜூலை 23ல் போர் தொடங்கியது. இது, 2009ம் ஆண்டு, மே 18ல் முடிவுக்கு வந்தது. இறுதிக்கட்டப்போரில் ஏறத்தாழ ஒரு இலட்சம் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதுவரை ஏறத்தாழ 65,000 பேர் காணாமல் போனதாக இலங்கை அரசுக்கு புகார் வந்துள்ளது.

ஆதாரம் : தினகரன்/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.