2016-09-10 15:51:00

சிறார் திருமணம் சிறுமிகளின் வருங்காலத்திற்கு அச்சுறுத்தல்


செப்.10,2016. நேபாளத்தில் இடம்பெறும் சிறார் திருமணங்கள், அந்நாட்டின் சிறுமிகளின் வருங்காலத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளன என்று, மனித உரிமைகள் வாட்ச் என்ற அமைப்பு(HRW) தனது அறிக்கையில் கூறியுள்ளது.

சிறார் திருமணங்களை நிறுத்துவதற்கு, நேபாள அரசு போதுமான நடவடிக்கைகள் எடுக்காததால், அந்நாட்டின் சிறுவர், சிறுமிகளின் வாழ்வில், அவை, ஆழமான பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்றும் அவ்வமைப்பு கூறியுள்ளது.

ஆசியாவில், சிறார் திருமணங்கள் அதிகமாக நடைபெறும் நாடுகளில் மூன்றாவது இடத்தில், நேபாளம் உள்ளது. இந்நாட்டில், 37 விழுக்காட்டுச் சிறுமிகள், 18 வயதை எட்டும் முன்னரும், பத்து விழுக்காட்டுச் சிறுமிகள் 15 வயதுக்குள்ளும் திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர் என்று, அவ்வமைப்பு கூறியுள்ளது.

நேபாளச் சட்டப்படி, இருபாலாருக்கும் திருமண வயது இருபது மற்றும் அந்நாட்டில், சிறார் திருமணம், 1963ம் ஆண்டில், சட்டப்படி இரத்து செய்யப்பட்டது என்று ஊடகச் செய்திகள் கூறுகின்றன.   

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.