2016-09-21 17:18:00

கர்தினால் டர்க்சன் வெளியிட்ட UNCTAD ஆண்டறிக்கை


செப்.21,2016. UNCTAD எனப்படும் ஐ.நா.வின் வர்த்தகம் மற்றும் முன்னேற்ற அவையுடன், திருப்பீட நீதி, அமைதி அவை இணைந்து செயல்படுவது மிகுந்த மகிழ்வைத் தருகிறது என்று, இத்திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், இப்புதனன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

"அனைவரையும் உள்ளடக்கிய, நீடித்திருக்கக்கூடிய முன்னேற்ற இலக்குகள்" என்ற தலைப்பில், UNCTAD அவையின் 2016ம் ஆண்டு அறிக்கையை வெளியிட்ட கர்தினால் டர்க்சன் அவர்கள், இவ்வாறு கூறினார்.

1964ம் ஆண்டு உருவாக்கப்பட்ட UNCTAD அவையின் வரலாற்றைக் குறித்து சுருக்கமாகக் குறிப்பிட்ட கர்தினால் டர்க்சன் அவர்கள் 1967ம் ஆண்டு உருவாக்கப்பட்ட திருப்பீட நீதி அமைதி அவையைக் குறித்தும் செய்தியாளர்களிடம் பேசினார்.

2008ம் ஆண்டு முதல், உலகை வாட்டி வதைக்கும் பொருளாதாரச் சரிவின் தாக்கத்தை இன்னும் உணர்ந்துவரும் இவ்வுலகில், ஐ.நா.வின் வர்த்தகம் மற்றும் முன்னேற்ற அவையின் 2016ம் ஆண்டு அறிக்கை வெளியாவதைக் குறித்துப் பேசிய கர்தினால் டர்க்சன் அவர்கள், வர்த்தகம், முன்னேற்றம் ஆகிய விழுமியங்கள் இன்னும் பல சவால்களைச் சந்திக்கவேண்டியுள்ளது என்பதை, செய்தியாளர்களிடம் எடுத்துரைத்தார். 

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.