2016-09-28 16:28:00

Shimon Peres இறப்புக்கு திருத்தந்தை அனுதாபத் தந்தி


செப்.28,2016. இஸ்ரேல் நாட்டின் முன்னாள் பிரதமரும், முன்னாள் அரசுத்தலைவருமான Shimon Peres அவர்கள் காலமானதையொட்டி, தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்கும் தந்திச் செய்தியை, அந்நாட்டு அரசுத்தலைவர், Reuven Rivlin அவர்களுக்கு அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

Shimon Peres அவர்களை, வத்திக்கானில் சந்தித்ததை நினைவுகூர்ந்துள்ள திருத்தந்தை, Shimon Peres அவர்களின் நினைவும், அவரின் பல ஆண்டுகாலப் பணியும், மக்கள் மத்தியில், அமைதி மற்றும் ஒப்புரவுக்காக உழைக்க வேண்டியதன் உடனடித் தேவையை, நம்மில் அதிகமாகத் தூண்டும் என்ற தனது நம்பிக்கையையும் தெரிவித்துள்ளார்.

Shimon Peres அவர்களின் மரபுரிமைப் பண்பு, உண்மையிலேயே மதிக்கப்படும் என்றும், மனித சமுதாயம், நிலையான அமைதியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் இவ்வேளையில், பொது நலனுக்காக அவர் அயராது உழைத்தவை, புதிய வடிவம் பெறும் என்றும், அத்தந்திச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

Shimon Peres அவர்களின் பிரிவால் துயருறும் அந்நாட்டினருக்கும், குறிப்பாக, அவரின் குடும்பத்தினருக்கு, தனது ஆறுதலையும், செபத்தையும் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

12 பேர் அடங்கிய அமைச்சரவையின் உறுப்பினராகப் பணியாற்றி, இஸ்ரேலின் பிரதமராக இருமுறையும், அரசுத்தலைவராக ஏழு ஆண்டுகளும் பணியாற்றிய

Shimon Peres அவர்கள், இப்புதனன்று, தனது 93வது வயதில் காலமானார்.

1994ம் ஆண்டில், Yitzhak Rabinand, Yasser Arafat ஆகியோருடன் இணைந்து, நொபெல் அமைதி விருதும் பெற்றவர், Shimon Peres.

மேலும், "நாம் இவ்வுலகை எவ்விதம் கண்டோமோ, அதைவிடச் சிறந்த நிலையில் இவ்வுலகை விட்டுச்சென்றால், எத்துணை அழகு அது" என்ற எண்ணம், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக, இப்புதனன்று வெளியானது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.