2016-09-29 16:13:00

FARC அமைப்பின் சிறார் படைவீரர்களுக்கு மறுவாழ்வு


செப்.29,2016. செப்டம்பர் 27, இச்செவ்வாயன்று, கொலம்பியா நாட்டு அரசுக்கும், FARC எனப்படும் போராளிகள் அமைப்பிற்கும் இடையே, அமைதி ஒப்பந்தம் உருவானதைத் தொடர்ந்து, FARC அமைப்பில் சிறார் படைவீரர்களாக வாழ்ந்துவந்த 13 பேர், அகில உலக செஞ்சிலுவைச் சங்கத்தின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்று, பீதேஸ் (Fides) செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

கடந்த 52 ஆண்டுகளாக கொலம்பிய அரசுக்கும், FARC அமைப்பிற்கும் இடையே நிகழ்ந்த மோதல்களின்போது, பல்லாயிரம் சிறுவர், சிறுமியர் போராடும் குழுக்களில் வலுக்கட்டாயமாக, போர் வீரர்களாக, இணைக்கப்பட்டனர் என்று கூறப்படுகிறது.

அமைதி ஒப்பந்தத்தையடுத்து, செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட சிறுவர் சிறுமியர் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும், அவர்கள், ஐ.நா. குழந்தைகள் நல அமைப்பான யூனிசெப்பின் (UNICEF) கண்காணிப்பில் இருப்பர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 27ம் தேதி, அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட நிகழ்வில், வத்திக்கான் சார்பில், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின், ஐ.நா.அவை பொதுச்செயலர், பான் கி மூன், மற்றும் தென் அமெரிக்காவின் பல்வேறு அரசுத் தலைவர்கள் கலந்துகொண்டனர் என்று ஊடகங்கள் கூறியுள்ளன.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.