2016-09-29 15:33:00

அமைதிக்காக, நான் சலிப்பின்றி விண்ணப்பித்துக்கொண்டே இருப்பேன்


செப்.29,2016. ஆயுதங்களும், அடக்குமுறைகளும், அளவுக்கதிகமாக, சிரியா நாட்டில் பயன்படுத்தப்படுவதால், துயர் துடைக்கும் பணியாளர்களின் முயற்சிகள், முன்னேற்றம் அடையாமல் இருப்பதைப்போல் தோன்றுகிறது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

சிரியாவிலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் பணியாற்றிவரும், திருத்தந்தையின் பிறரன்பு அமைப்பான கோர் ஊனும் (Cor Unum) குழுவைச் சார்ந்தவர்களையும், ஏனைய பிறரன்பு பணிக்குழுக்களின் உறுப்பினர்களையும், இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, இப்பணியாளர்கள், அயர்வின்றி ஆற்றும் பணிகளுக்காக நன்றி தெரிவித்தார்.

சிரியாவின் துன்பங்களுக்குக் காரணமான, வன்முறை, அகந்தை, செயலற்ற மனநிலை என்ற மூன்று தீமைகளின் பிடியில் சிக்கியுள்ளவர்களின் மனசாட்சியைத் தட்டியெழுப்பி, கேள்விகள் கேட்க வேண்டியது, இவ்வுலகின் கடமை என்று, திருத்தந்தை தன் உரையில் குறிப்பிட்டார்.

அழிவு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயலாற்றுவோரை, இறைவனின் இரக்கம் தொடவேண்டும் என்று, இந்த இரக்கத்தின் யூபிலி ஆண்டில், கிறிஸ்துவின் மீது நம் கண்களைப் பதித்து,  சிறப்பாக செபிப்போம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிறரன்புப் பணியாளர்களிடம் விண்ணப்பித்தார்.

சிரியா, ஈராக் ஆகிய நாடுகளில் வாழ்வோருக்கு, உதவிகளைவிட, மிக அவசரமாகத் தேவைப்படுவது, அமைதி என்பதை, தன் உரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, அந்த அமைதிக்காக, நான் சலிப்பின்றி விண்ணப்பித்துக்கொண்டே இருப்பேன் என்றும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.