2016-10-25 14:46:00

இது இரக்கத்தின் காலம் : துணிவுகொள்ளும் நேரம் இது!


அக்டோபர் 23, கடந்த ஞாயிறு, கத்தோலிக்கத் திருஅவை, மறைபரப்புப் பணி ஞாயிறைச் சிறப்பித்தது. "பணியாற்ற அனுப்பப்படும் திருஅவை, இரக்கத்தின் சாட்சி" (Missionary Church, Witness of Mercy) என்பது, 2016ம்ஆண்டுக்கெனத் தேர்ந்தெடுக்கப்பட்டக் கருத்து. இஞ்ஞாயிறன்று, நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, இன்றையச் சூழலில் நாம் மேற்கொள்ள வேண்டிய மறைபரப்புப் பணி குறித்து, இவ்வாறு பேசினார்:

"இது பணியேற்கும் நேரம், துணிவுகொள்ளும் நேரம்! தடுமாறும் நம் பாதங்களை உறுதிப்படுத்துவதற்கு, நற்செய்திப் பணியால் உண்டாகும் சுவையை உணர்வதற்கு, நமது பணி கொணரும் சக்தியில் மீண்டும் நம்பிக்கை கொள்வதற்கு, துணிவுகொள்ளும் நேரம் இது!

வெற்றி உறுதியில்லை என்பதை உணர்ந்தாலும், தொடர்ந்து போராடும் துணிவு, நம்மிடம் எதிர்பார்க்கப்படுகிறது.

வாதங்களையும், வன்முறைகளையும் மேற்கொள்ளாமல், ஒரு மாற்று அடையாளமாக, இவ்வுலகில் வாழும் துணிவு, நம்மிடம் எதிர்பார்க்கப்படுகிறது.

கிறிஸ்துவின் தனித்துவத்தை எவ்வகையிலும் குறைத்துவிடாமல், அதேவேளை, மற்றவர்களின் கருத்துக்களை ஏற்கும் திறந்த மனம் கொள்ளும் துணிவு, நம்மிடம் எதிர்பார்க்கப்படுகிறது.

அகந்தை அறவே இல்லாமல், நம்பிக்கையின்மையை எதிர்த்து நிற்கும் துணிவு, நம்மிடம் எதிர்பார்க்கப்படுகிறது.

நற்செய்தியில் நாம் காணும் வரிதண்டுபவரைப்போல், மார்பில் அடித்துக்கொண்டு, "கடவுளே, பாவியாகிய என்மேல் இரங்கியருளும்" என்று சொல்லும் துணிவு, நம்மிடம் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று, துணிவுகொள்ளும் நேரம்!" என்று அழைப்பு விடுத்தார், திருத்தந்தை.

நற்செய்தியை பறைசாற்ற, பல்லாயிரம் உன்னத உள்ளங்கள், உலகின் விளிம்புகளுக்கு துணிவுடன் சென்றனர் என்பதை, கடந்த 90 ஆண்டுகளாக, மறைபரப்புப்பணி ஞாயிறன்று பெருமையுடன் கொண்டாடி வந்துள்ளோம். இன்று, நற்செய்தியை, பகிர்ந்துகொள்ள, பணிவான உள்ளத்துடன் உலகெங்கும் செல்வதற்கு, குறிப்பாக, சமுதாயத்தின் விளிம்புகளுக்குத் தள்ளப்பட்டுள்ளவர்களிடம் செல்வதற்கு, இரக்கத்தின் காலத்தில் துணிவுகொள்வோம். இவ்வுலகம் சொல்லும் செய்திகளுக்கு முற்றிலும் மாறுபட்ட நற்செய்தியாக வாழ்வதற்கும், இரக்கத்தை ஏந்திச் செல்லும் மறைபரப்புப் பணியாளர்களாக மாறுவதற்கும் இரக்கத்தின் காலத்தில் துணிவுகொள்வோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.