2016-11-04 15:00:00

சிறார் விவகாரம் குறித்த நொபெல் ஆர்வலர்கள் கூட்டம்


நவ.04,2016. உலகளவில் துன்புறும் சிறார் விடயம் குறித்து கலந்துரையாடுவதற்கு, நொபெல் விருது பெற்ற ஆர்வலர்கள், வருகிற டிசம்பரில், டெல்லியில் கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளனர்.

டெல்லி, குடியரசுத் தலைவர் மாளிகையில், வருகிற டிசம்பர் 10,11 நாள்களில் நடைபெறவுள்ள கூட்டத்தில், உலகில், குறிப்பாக, போர் இடம்பெறும் பகுதிகளில், இலட்சக்கணக்கான சிறார் துன்புறுவது குறித்து ஆராயப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இக்கூட்டம் குறித்துப் பேசிய, நொபெல் அமைதி விருது ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி அவர்கள், போர்கள், ஆயுத மோதல்கள் அல்லது வன்முறைக்கு, சிறார் எந்த விதத்திலும் காரணமல்ல, ஆயினும், கொடூரமான சூழல்களில், சிறாரே அதிகம் துன்புறுகின்றனர் என்று கூறினார்.

உலகில், ஏறக்குறைய 16 கோடியே 80 இலட்சம் சிறார் தொழிலாளர் உள்ளனர், ஐந்துக்கும், 17 வயதுக்கும் உட்பட்ட உலகச் சிறாரில், இச்சிறார் தொழிலாளர் ஏறக்குறைய பத்து விழுக்காட்டினர் என்றும், உலகில், ஏறக்குறைய 55 இலட்சம் சிறார் அடிமைத்தனத்தில் சிக்கியுள்ளனர் என்றும், தெரிவித்தார் சத்யார்த்தி.

சத்யார்த்தி அவர்களின் நிறுவனத்தின் வழியாக நடத்தப்படும் இக்கூட்டத்தில், தலாய் லாமா, முன்னாள் ஆஸ்திரேலிய பிரதமர் Julia Gillard, Grameen வங்கியின் Ratan Kumar Nag, ஏமன் மனித உரிமை ஆர்வலர் Tawakkol Karman, லைபீரிய அமைதி ஆர்வலர் Leymah Roberta Gbowee, நெல்சன் மண்டேலாவின் மனைவி Graca Machel, நெதர்லாண்டஸ் இளவரசி Laurentien, அமெரிக்க மனித உரிமை ஆர்வலர் Kerry Kennedy, Yuan Lee, Jose Ramos-Horta என, ஏறக்குறைய 25 நொபெல் விருது பெற்ற ஆர்வலர்களும், மற்றவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

ஆதாரம் : IANS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.