2016-12-08 16:12:00

அருள்பணியாளர்கள் உருவாக்கம் குறித்து, புதிய வழிமுறைகள்


டிச.08,2016. அருள்பணியாளர்கள், சமுதாயப் பணியாற்றும் செயல்வீரர்கள் அல்ல, மாறாக, இறைமக்களுக்கென, கடவுளால் அருள்பொழிவு செய்யப்பட்டவர்கள் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ள கருத்தை, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர், வத்திக்கான் நாளிதழுக்கு வழங்கிய ஒரு பேட்டியில் நினைவு கூர்ந்துள்ளார்.

அருள்பணியாளர்களை உருவாக்குதல் குறித்து, புதிய வழிமுறைகளை உள்ளடக்கிய ஓர் ஏடு, டிசம்பர் 7 இப்புதனன்று வெளியானதையொட்டி, அருள்பணியாளர்கள் பேராயத்தின் தலைவர், கர்தினால் Beniamino Stella அவர்கள், வத்திக்கான் நாளிதழ் L’Osservatore Romanoவுக்கு அளித்த பேட்டியொன்றில், இவ்வேட்டினைக் குறித்து கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

"அருள்பணியாளர் அழைப்பு என்ற கோடை" ("The Gift of the Priestly Vocation") என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்த வழிமுறை ஏடு, 1970 மற்றும் 1985 ஆகிய ஆண்டுகளில் வெளிவந்த மாற்றங்களை உள்ளடக்கி, இன்றையச் சூழலுக்கு ஏற்ற வழிமுறைகளை பரிந்துரைக்கிறது என்று, கர்தினால் ஸ்டெல்லா அவர்கள், தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

ஒருவர் அருள்பணியாளராக வாழ்வதற்கு, முதலில், அவர் ஒரு முழு மனிதராக, மனிதருக்குரிய அனைத்து உணர்வுகளையும் ஒருங்கிணைத்தவராக இருக்கவேண்டும் என்பது இந்த ஏட்டில் தெளிவாக்கப்பட்டுள்ளது என்று, கர்தினால் ஸ்டெல்லா அவர்கள் வலியுறுத்தினார்.

'மனிதம்' 'ஆன்மீகம்' மற்றும் 'தேர்ந்து தெளிதல்' ஆகிய மூன்று கருத்துக்கள் அருள்பணியாளர்களின் வாழ்வில் அடிப்படை விழுமியங்களாக இருக்கவேண்டும் என்பது இந்த ஏட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது என்று கர்தினால் ஸ்டெல்லா அவர்கள் தன் பேட்டியில்  சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.