2016-12-23 15:03:00

மனிதாபிமான நெருக்கடிகளை எதிர்நோக்கும் உக்ரைனுக்கு உதவி


டிச.23,2016. கடும் மனிதாபிமான நெருக்கடிகளை எதிர்நோக்கும் உக்ரைன் நாட்டிற்கு, இக்கிறிஸ்மஸ் காலத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயரில், நிதியுதவியை வழங்குவதாக, திருப்பீட கோர் ஊனும் அவை அறிவித்துள்ளது.

கோர் ஊனும் அவை வழங்கவுள்ள ஏறக்குறைய அறுபது இலட்சம் யூரோக்கள், உக்ரைனில், குறிப்பாக, அந்நாட்டின் Donetsk, Lugansk, Zaporizhia, Kharkiv, Dnepropetrovsk ஆகிய பகுதிகளில் வாழ்கின்ற, இருபது இலட்சம் மக்களின் அடிப்படை தேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுத மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டிற்கென, திருத்தந்தையின் வேண்டுகோளின்பேரில், ஐரோப்பாவின் அனைத்து ஆலயங்களிலும், கடந்த ஏப்ரல் 24ம் தேதி, திரட்டப்பட்ட இந்நிதியுதவி, உணவு, மருத்துவம் மற்றும் பிற நலவாழ்வு உதவிகள் தேவைப்படுகிறவர்களுக்கு, மதம், இனம், என்ற வேறுபாடின்றி வழங்கப்படவுள்ளது.

ஐ.நா.வின் மனித உரிமைகள் அமைப்பின் கூற்றுப்படி, உக்ரைனில் இடம்பெற்ற சண்டையில், 9,758 பேர் இறந்துள்ளனர் மற்றும், 22,779 பேர் காயமடைந்துள்ளனர் எனத் தெரிகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.