2016-12-28 15:23:00

ஈராக்கிலிருந்து புலம்பெயர்ந்தோரின் கிறிஸ்மஸ்


டிச.28,2016. ஈராக்கிலிருந்து புலம்பெயர்ந்து முகாம்களில் வாழ்வோர், ஈராக் நாட்டின் நினிவே சமவெளிப் பகுதியிலிருந்து இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்கள் வெளியேறிவருகின்றனர் என்ற செய்தி கேட்டு, ஆனந்தமாகக் கொண்டாடினர் என்று குர்திஸ்தான் இலத்தீன் வழிபாட்டு முறை ஆயரின் அப்போஸ்தலிக்க பிரதிநிதியாகப் பணியாற்றும் அருள்பணி லூயிஸ் மோந்தேஸ் (Luis Montes) அவர்கள் கூறினார்.

முகாம்களில் இருப்போரின் வாழ்வில் இனி எந்த பிரச்சனையும் இல்லை என்ற பாணியில் அவர்கள் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை மேற்கொண்டது நம்பிக்கை தரும் அடையாளமாக இருந்தது என்று அருள்பணி மோந்தேஸ் அவர்கள் Aid to the Church in Need என்ற கத்தோலிக்க பிறரன்பு அமைப்பினரிடம் கூறினார்.

2014ம் ஆண்டு கோடைக்காலம் முதல், நினிவே சமவெளியை இஸ்லாமியத் தீவிரவாதக் குழுவினர் தங்கள் ஆதிக்கத்தில் கொணர்ந்ததைத் தொடர்ந்து, அப்பகுதியிலிருந்து வெளியேறிய 1,20,000 மக்கள், குர்திஸ்தானின் எர்பில் பகுதியில் தஞ்சம் அடைந்துள்ளனர் என்று Zenit கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.

மீட்கப்பட்ட பகுதிகளில் மக்கள் உடனடியாக குடியேற முடியாத அளவு தீவிரவாத அமைப்பு அப்பகுதியை அழித்ததோடு மட்டுமல்லாமல், குழந்தைகளின் விளையாட்டுப் பொருள்கள் உட்பட, பல பொருள்களிலும், இடங்களிலும், கண்ணிவெடிகளை விட்டுச் சென்றுள்ளனர் என்று, அருள்பணி மோந்தேஸ் அவர்கள் மேலும் கூறினார்.

இஸ்லாமிய தீவிரவாத அமைப்பிடமிருந்து ஈராக் மீட்கப்பட்டதுடன் தங்கள் கடமை முடிந்துவிட்டதென பன்னாட்டு அரசுகள் நினைக்காமல், ஈராக் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் பணியிலும் அவர்கள் ஈடுபடவேண்டும் என்று அருள்பணி மோந்தேஸ் அவர்கள் விண்ணப்பித்தார்.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.