2017-01-19 15:25:00

பாசமுள்ள பார்வையில்.. ஒரு தாயின் எதிர்பார்ப்பு


தாய் மகன் உரையாடல்

தாய் : மகனே, உன்னைப் பெற்றெடுத்தபோது மரணத்தோடு போராடினேன். நீ, நோயுற்றிருக்கும்போதும், அழுகின்றபோதும், தூங்காமல் எத்தனையோ இரவுகள் செலவிட்டேன். முதலில் உனக்கு உணவு கொடுக்காமல், நான் ஒருபோதும் சாப்பிட்டதில்லை. உன்னை உயர்ந்த நிலைக்குக் கொண்டுவர நான் எவ்வளவோ வேதனைகளைத் தாங்கினேன். என் குழந்தாய், இவற்றை நீ எனக்கு எப்படித் திருப்பித் தருவாய்?

மகன் : அம்மா, நான் வளர்ந்த பின், ஒரு நல்ல வேலையாய்த் தேடி, நிறைய பணம் சம்பாதித்து, இவ்வுலகின் எல்லா இன்பங்களையும் நீங்கள் அனுபவிக்கச் செய்வேன்

தாய் : உனது தந்தை இவற்றையெல்லாம் ஏற்கனவே செய்து வருகிறார். இவற்றை நான் உன்னிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. நீ, சம்பாதிக்கும் காலத்தில், எனக்கு வயதாகி விடும். அப்போது எனக்கு இவ்வுலகின் எவ்வித ஆடம்பரங்களும் தேவைப்படாது

மகன் : அப்படியானால் அம்மா, நான் பக்தியுள்ள ஒரு பெண்ணாகப் பார்த்து திருமணம் செய்து கொள்கிறேன். அப்பெண் உங்களை நன்றாகக் கவனித்துக் கொள்வார்

தாய் : மகனே, இது அப்பெண்ணின் கடமை அல்ல. நானும் அப்பெண்ணிடமிருந்து இதனை எதிர்பார்க்கவில்லை. இக்காரணத்திற்காகவும் நீ திருமணம் செய்துகொள்ளத் தேவையில்லை. உனது திருமணம், உனது வசதிக்காக இருக்க வேண்டும். அதோடு, உனக்கு மனைவியாக வருபவர், உன் வாழ்வுப் பயணம் முழுவதும், உனக்கு ஆறுதலாக, உன்னோடு துணை நிற்பவராக இருக்க வேண்டும்.

மகன் : அப்படியானால், நான் எப்படித் திருப்பிச் செலுத்த வேண்டும் அம்மா...

தாய் : என்னை அடிக்கடி வந்து பார் அல்லது, என்னோடு அடிக்கடி தொலைபேசியில் பேசு. நான் இறக்கும்போது உனது தோளைச் சாய்த்துக்கொடு. என்னை நல்லடக்கம் செய். நீ செபிக்கும்போது எனது ஆன்மாவுக்காகச் செபம் செய். எனக்காக, பிறருக்கு நற்காரியங்களைச் செய். உனது ஒவ்வொரு நல்ல செயலும் எனக்கு நன்மை பயக்கும். எனவே, எப்போதும் நல்லவனாக, பாசமுள்ளவனாக இரு. உன்னைச் சுற்றியிருப்பவர்களின் உரிமைகளை மதித்து நிறைவேற்று. உனக்காக நான் விழித்திருந்த இரவுகள், வேதனைகள் அனைத்தும், உனக்காக அல்ல, என்னைப் படைத்தவருக்காகச் செய்தவை. அந்த இறைவன், உன்னை, எனக்கு, ஓர் அழகான கொடையாகத் தந்து, என்னை ஆசீர்வதித்திருக்கிறார். மகனே, நீ புரியும் ஒவ்வொரு நற்செயலும், நீ எனக்குத் திருப்பிச் செலுத்துவதாக அமையும். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.