2017-01-21 15:46:00

பாரிஸ் வாழ்வுக்கு ஆதரவு பேரணிக்கு திருத்தந்தை வாழ்த்து


சன.21,2017. “நம் மீட்பரை நினைத்துக்கொண்டு, புனித தோமினிக் அவர்களோடு, மகிழ்வோடு முன்னோக்கிச் செல்வோம்” என்ற சொற்கள், இச்சனிக்கிழமையன்று, திருத்தந்தையின் டுவிட்டரில் வெளியாயின. புனித தோமினிக் சபை தொடங்கப்பட்டதன் 800ம் ஆண்டு நிறைவு யூபிலித் திருப்பலியை, இச்சனிக்கிழமை மாலையில், உரோம் ஜான் இலாத்தரன் பசிலிக்காவில் நிறைவேற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், சனவரி 22, இஞ்ஞாயிறன்று, பிரான்ஸ் நாட்டின் பாரிசில், நடைபெறும், வாழ்வுக்கு ஆதரவான பேரணிக்கு, தனது ஆதரவைத் தெரிவிக்கும் வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இப்பேரணியில் கலந்துகொள்வோருக்கு, பிரான்ஸ் நாட்டிற்கான திருப்பீடத் தூதர் பேராயர் Luigi Ventura அவர்கள் வழியாக, திருத்தந்தை அனுப்பியுள்ள செய்தியில், திருஅவை, வாழ்வுக்கு ஆதரவு வழங்குவதில், ஒருபோதும் சோர்வடைவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

கருவான நேரம் முதல், இயற்கையான மரணம் அடையும்வரை, மனித வாழ்வு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை அறிவிப்பதிலிருந்து, திருஅவை, ஒருபோதும் தவறக் கூடாது என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மனித வாழ்வை ஆதரித்து பேரணி நடத்துவது முறையானது என்றும் கூறியுள்ள  திருத்தந்தை, அன்பு மற்றும், வாழ்வுக் கலாச்சாரத்தைக் கட்டியெழுப்புவதற்குத் தளராமல் உழைக்குமாறும், அப்பேரணியில் கலந்துகொள்வோரை ஊக்கப்படுத்தியுள்ளார்.

மேலும், இத்தாலியின் பதுவை நகரில், ஆயுள் தண்டனை கைதிகள் குறித்து நடைபெற்ற ஒரு கருத்தரங்கிற்கு, பதுவைச் சிறைச்சாலையின் ஆன்மீக அருள்பணியாளர் Marco Pozza அவர்கள் வழியாகச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.