2017-01-27 16:20:00

கருக்கலைப்பு ஒவ்வொருவரின் மனித உரிமைகளை மீறுகின்றது


சன.27,2017. கருக்கலைப்பு பரவலாக இடம்பெறும் ஒரு கலாச்சாரத்தில், எந்த ஒரு மனிதரின் உரிமையும் பாதுகாப்பாக இல்லையென்று, நியு யார்க் கர்தினால் திமோத்தி டோலன் அவர்கள், இவ்வியாழன் மாலையில் கூறினார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டில், இவ்வெள்ளியன்று, மனித வாழ்வுக்கு ஆதரவான பேரணி தேசிய அளவில் நடைபெற்றவேளை, இப்பேரணியின் ஆரம்பமாக, இவ்வியாழன் மாலையில், அமலமரி தேசியத் திருத்தலத்தில் திருப்பலி நிறைவேற்றிய, கர்தினால் டோலன் அவர்கள், தாயின் உதரம், முதல் திருத்தலம் என்ற நம்பிக்கையை அறிவிப்பதற்காக, இங்கு நாம் கூடியுள்ளோம் என்று கூறினார்.

சிறிய, மாசற்ற குழந்தை, தாயின் உதரத்தில், உணவளிக்கப்பட்டு பாதுகாப்பாக இருக்கின்றது என்று, தன் மறையுரையில் கூறிய, கர்தினால் டோலன் அவர்கள், கருக்கலைப்பு, ஒவ்வொருவரின் மனித உரிமைகளை குறைத்து மதிப்பிடுகின்றது என்றும் தெரிவித்தார்.

17ம் நூற்றாண்டில், அடக்குமுறைக்கு அஞ்சி இங்கிலாந்திலிருந்து வந்தவர்களுக்கு, அமெரிக்கா புகலிடமாக இருந்தது எனவும், இக்காலத்தில், புலம்பெயர்ந்தோரும், குடியேற்றதாரரும், அமெரிக்காவைப் புகலிடமாகக் கருதுகின்றனர் என்றும் தெரிவித்தார் கர்தினால் டோலன்.

மனித வாழ்வுக்கு, சுற்றுச்சூழலும், ஒரு புகலிடம் என்றும் உரைத்தார் கர்தினால் டோலன்.

இவ்வெள்ளியன்று நடைபெற்ற மனித வாழ்வு ஆதரவுப் பேரணியில், பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். 

ஆதாரம் : CWN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.