2017-02-16 15:36:00

அமெரிக்க, மெக்சிகோ "எல்லைப்புற ஆயர்களின்" அறிக்கை


பிப்.16,2017. குடியேற்றம் என்பது, உலகளாவிய நிகழ்வு, இதற்குப் பின்னணியில், வறுமை, பாதுகாப்பின்மை, மற்றும் ஏனைய பொருளாதார, சமுதாய காரணங்கள் அமைந்துள்ளன என்று அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும், மெக்சிகோ ஆயர்கள் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர் என்று பீதேஸ் செய்திக்குறிப்பொன்று கூறுகிறது..

"எல்லைப்புற ஆயர்கள்" என்ற பெயரில், டெக்ஸாஸ் மற்றும் வடக்கு மெக்சிகோ பகுதிகளைச் சேர்ந்த ஆயர்கள் இணைந்துவந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியேற்றம் என்ற துறையில் ஏற்பட்டுள்ள பல்வேறு சட்ட மாற்றங்கள், குடும்பங்களை எவ்வாறு சிதைத்து, துன்புறுத்துகின்றன என்பதை ஆயர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நேரத்திற்கு ஒன்றாக மாறிவரும் அரசுக் கொள்கைகளால், அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும், மெக்சிகோவுக்கும் இடையில் மட்டுமல்ல, மாறாக, மத்திய அமெரிக்க நாடுகளுக்கும், மெக்சிகோவுக்கும் இடையிலும் உரசல்கள் உருவாகியுள்ளன என்பதை, ஆயர்களின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இந்நிலையில், குடிபெயரும் அனைத்து மக்களுக்கும் ஆன்மீக உதவிகளை அளிப்பதுடன், அவர்களுக்குத் தேவையான சட்டவழி உதவிகள், மற்றும், பொருள் உதவிகளை வழங்குவது, 'எல்லைப்புற ஆயர்களின்' கடமை என்று இவ்வறிக்கை எடுத்துரைக்கிறது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.