2017-02-20 16:19:00

நன்மைத்தனத்தால் பாதிக்கப்பட்டவர்களாக, அதையே எடுத்துரைப்போம்


பிப்.20,2017. 'தீமை என்பது ஒரு தொற்றுநோய் எனில், நன்மையும் அத்தகையதே. ஆகவே, நன்மையால் பாதிப்படைந்தவர்களாக, நாம் நன்மைத்தனத்தை பரப்புவோம்' என தன் திங்கள் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், இத்திங்களன்று 'அத் லிமினா' சந்திப்பையொட்டி உரோம் நகர் வந்திருந்த சிலே நாட்டின் 30 ஆயர்களை, திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், வரும் ஞாயிறன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் நகரின் ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபை கோவிலுக்குச் செல்வது குறித்த விவரங்கள் இத்திங்களன்று வெளியிடப்பட்டன.

உரோம் மறைமாவட்டத்தின் ஆயர் என்ற முறையில், திருத்தந்தை ஒருவர், உரோம் நகரில் உள்ள ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபை கோவிலுக்கு செல்வது, இதுவே முதன் முறை என்று இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அனைத்துப் புனிதர்கள் என்ற பெயர் தாங்கியுள்ள அக்கோவிலில் நடைபெறும் மாலை வழிபாட்டில் கலந்துகொள்ளும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கு மறையுரை வழங்குவதோடு, ஆங்கிலிக்கன் கிறிஸ்தவசபை அங்கத்தினர்களின் கேள்வி-பதில் நிகழ்ச்சியிலும் கலந்துகொள்வார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.