2017-02-22 15:20:00

சாம்பலில் பூத்த சரித்திரம் – திருத்தூதர்கள் காலம் பாகம் 5


பிப்.22,2017. அன்று இயேசு கப்பர்நாகும் என்ற ஊரில், முடக்குவாதமுற்ற ஒருவருக்கு குணமளித்த பின்பு  மீண்டும் கடலோரம் சென்றார். மக்கள் கூட்டத்தினர் எல்லாரும் அவரிடம் வரவே, அவர் அவர்களுக்குக் கற்பித்தார். பின்பு அவர் அங்கிருந்து சென்றபோது, அல்பேயுவின் மகன் லேவி, சுங்கச்சாவடியில் அமர்ந்திருந்ததைக் கண்டு, அவரிடம், “என்னைப் பின்பற்றி வா”(மாற்.2,14,மத்.9:9) என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார். பின்பு இயேசு, அவருடைய வீட்டில் உணவருந்தினார். இயேசு லேவியின் வீட்டில் பந்தி அமர்ந்திருந்தபோது, வரிதண்டுபவர்கள், பாவிகள் ஆகிய பலர் இயேசுவோடும் அவருடைய சீடரோடும் விருந்துண்டனர். அப்போது, பரிசேயரைச் சார்ந்த மறைநூல் அறிஞர், இயேசுவின் சீடரிடம், “இவர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பதேன்?” என்று கேட்டனர். இவ்வாறு, மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்தி நூல்களில் வாசிக்கிறோம்.  மறைநூல் அறிஞர் இவ்வாறு கேட்டதற்கு காரணம் உள்ளது.

புனித பூமி, உரோமைப் பேரரசின்கீழ் இருந்த அக்காலத்தில், அப்பேரரசுக்கு வரி தண்டிக் கொடுப்பவர்கள், யூத சமூகத்தால் ஒதுக்கப்பட்டிருந்தனர். இந்தத் தொழிலுக்கு ஊதியம் கிடையாது. அதனால், வரி தண்டுபவர்கள், வரி தண்டும்போது, மக்களை ஏமாற்றி அதிலிருந்து தங்களுக்கு ஆதாயம் தேடினர். அதனால், இவ்வேலை செய்பவர்கள் பொதுவாக நேர்மையற்றவர்கள் என, பக்தியுள்ள யூதர்கள் கருதி, அவர்களை வெறுத்தும் ஒதுக்கினர். மேலும், வரிதண்டுபவர்கள், உரோமை அரசுக்கு வேலை செய்ததால், தேசப்பற்று கொண்ட யூதர்களும், தேசியவாதிகளும் அவர்கள் மீது பகைமை பாராட்டினர். அதுவும், அவ்வாறு வேலை செய்பவர்கள், லேவி போன்று யூதர்களாக இருந்தால், அவர்களின் காழ்ப்புணர்வு இரட்டிப்பாக இருந்தது. ஏனென்றால், இவர்கள், தங்களின் பகைவர்களாகிய உரோமையர்களிடம், பணத்துக்காக, தங்கள் சொந்த மக்களையே காட்டிக்கொடுக்கின்றனர் என்று நம்பினர். இதனால், நற்செய்தியில், வரிதண்டுபவர்கள், பாவிகளாகவும், புறவினத்தாராகவும் சொல்லப்படுகின்றனர். இயேசு தம்மைப் பின்பற்றி வா என அழைத்த மத்தேயுவையும், பாவியாகவே யூத மறைநூல் அறிஞர்கள் கருதினர். ஆனால், இயேசு, பாவி என ஒதுக்கப்பட்ட லேவியை, தம்முடன் இருக்க அழைத்தார். மேலும், லேவி, இயேசுவுக்கு அளித்த விருந்திற்கு, தன்னைச் சார்ந்தவர்களையும் அழைத்து, இயேசுவைச் சந்திக்கச் செய்தார். யூத சமூகத்தால் ஒதுக்கப்பட்டிருந்த இவர்கள், தங்களுக்கும் இயேசுவின் அன்பு கிடைத்தது என உணர்ந்தனர்.   

லேவி, சுங்கச்சாவடியில் அமர்ந்திருந்ததைக் கண்டு இயேசு அவரை அழைத்தார் என, மாற்கு மற்றும் லூக்கா நற்செய்தியாளர்கள் எழுதியுள்ளனர். இதே அழைப்பை, மத்தேயு நற்செய்தியாளர், சுங்கச்சாவடியில் அமர்ந்திருந்த மத்தேயுவை, இயேசு அழைத்தார் என்று எழுதியுள்ளார். எனவே திருத்தூதர் மத்தேயுவின் இயற்பெயர் "லேவி" எனவும், அவர் இயேசுவைப் பின்தொடர்ந்த பின், மத்தேயு என்று பெயர் மாறியிருக்கலாம் எனவும் சொல்கின்றனர். மேலும், லேவி என்ற பரம்பரையை, அவர் சேர்ந்தவராக இருக்கலாம் எனவும் சொல்கின்றனர். பெந்தக்கோஸ்து நாளுக்குப் பின்னர், திருத்தூதர் மத்தேயுவின் வாழ்வு பற்றி நற்செய்தியில் எதுவும் சொல்லப்படவில்லை. "மத்தேயு" என்றால், "ஆண்டவரின் கொடை" என்று பொருள். திருத்தூதர் மத்தேயு, வரிதண்டும் தொழிலைச் செய்து வந்ததால், அவருக்கு பல்வேறு கலாச்சாரப் பின்னணியில் வாழ்ந்த மக்களோடு பழக்கம் இருந்தது. அதுவே அவரின் பன்மொழித் திறனுக்கும் காரணமாக இருந்தது. எபிரேயம், கிரேக்கம், அரமேயம் போன்ற மொழிகளில் அவருக்கு நல்ல புலமை இருந்தது. இவர், ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகள், புனித பூமியிலே தங்கி, யூதர்களுக்கு நற்செய்தி அறிவித்து வந்தார்.  மற்ற கிறிஸ்தவத் தலைவர்கள், வேறு இடங்களிலும், யூதர்கள் அல்லாத மக்கள் மத்தியிலும் சிறப்பாகப் போதித்து வந்ததை அறிந்து, மத்தேயுவும், பல்வேறு நற்செய்திப் பயணங்களை மேற்கொண்டார். பாரசீகத்திற்கும், எத்தியோப்பியப் பகுதிகளுக்கும் சென்று, கிறிஸ்துவைப் பற்றி போதித்து, பின் எகிப்துக்கும் சென்றார்.

மத்தேயு, எகிப்து நாட்டில் நற்செய்திப்பணியாற்றிக்கொண்டிருந்தபோது, எகிப்து மன்ன்னின் மகன் இறந்தது அறிந்து, அரண்மனைக்குச் சென்று, அம்மகனுக்கு உயிர்ப்பிச்சை அளித்தார். இதனால், அவரின் நற்செய்திப் போதனையை பலர் நம்ப ஆரம்பித்தார்கள். அரசவையில் இபிஜெனியா என்ற ஒரு இளவரசி இருந்தாள். அவளுக்குத் தொழுநோய். தொழுநோயாளிகள் ஆண்டவனின் சாபம் பெற்றவர்கள் என்று கருதப்பட்ட காலம் அது. இளவரசியும் ஒதுக்கி வைக்கப்பட்டாள். மத்தேயு, இளவரசியின் தொழுநோயையும் குணப்படுத்தினார். இவர், ஏறக்குறைய இருபத்து மூன்று ஆண்டுகள் எகிப்திலும், எத்தியோப்பியாவிலும் நற்செய்தி பணிபுரிந்தார் எனக் கூறப்படுகின்றது.

திருத்தூதர் மத்தேயுவின் பணிகளைப் பார்த்து எரிச்சலடைந்த பேரரசன் Domitian, கி.பி 90ம் ஆண்டில், மத்தேயுவுக்கு மரண தண்டனை விதித்தான். அவரை நிற்க வைத்து படைவீரர்களை வைத்து ஈட்டியால் குத்தச் செய்தான். இரத்த வெள்ளத்தில் மிதந்த மத்தேயு, இயேசுவின் பெயரை உச்சரித்துக் கொண்டே இறந்தார். அவர், எத்தியோப்பியாவிலிருந்து திரும்பிய சமயம் எகிப்தில், அல்லது வட கிழக்கு ஈரானின் Parthiaவில் மறைசாட்சியாகக் கொல்லப்பட்டார் என, ஒரு பாரம்பரியம் சொல்கிறது. இவர், இயற்கையான மரணம் அடைந்தார் என, மற்றொரு பாரம்பரியம் சொல்கிறது. ஆயினும், இவர், மறைசாட்சியாகக் கொல்லப்பட்டார் என்றே, தொடக்ககால கிறிஸ்தவ சமூகம் சொல்லியுள்ளது. பன்னிரண்டு திருத்தூதர்களில் கல்வியறிவு பெற்ற மத்தேயு, சிறந்த எழுத்தாளர் எனவும் சொல்லப்படுகிறது. ஆயினும், திருத்தூதர் மத்தேயுதான், நற்செய்தியாளர் மத்தேயு என்பதும் விவாதத்திற்கு உட்பட்டதாகவே உள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.