2017-03-01 16:07:00

பழங்குடியினத்தைச் சேர்ந்த ஆயர்களின் ஆலோசனைக் கூட்டம்


மார்ச்,01,2017. இந்தியாவில் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஆயர்களின் ஆலோசனைக் கூட்டம் ஒன்று, அண்மையில் இராஞ்சி நகரில் நடைபெற்றது என்று, UCAN செய்தி கூறுகிறது.

இந்தியாவின் மத்தியப் பகுதியில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இந்துத்துவக் கொள்கையை ஆதரிக்கும் கட்சிகள் ஆட்சி செய்வதால், கிறிஸ்தவர்களுக்கு உருவாகும் பிரச்சனைகள் குறித்து, பழங்குடியினத்தைச் சேர்ந்த 11 ஆயர்கள், தங்கள் கவலையை வெளியிட்டனர்.

பொதுவாகவே, தேர்தல் காலத்தில், பழங்குடியினத்தவருக்கு அளிக்கப்படும் பல்வேறு உறுதி மொழிகளை, ஆட்சிக்குவரும் அரசுகள் பின்பற்றுவதில்லை என்று, இராஞ்சி பேராயர், கர்தினால் டெலெஸ்போர் டோப்போ அவர்கள், இக்கூட்டத்தில் எடுத்துரைத்தார்.

வறட்சி, வேலையின்மை போன்ற பல்வேறு பிரச்சினைகளாலும், கிறிஸ்தவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளாலும், பழங்குடியினர் வாழும் பகுதிகளிலிருந்து பல்லாயிரம் மக்கள் வெளியேறி வருகின்றனர் என்று, பழங்குடியினர் பணித்துறையின் தலைவர், ஆயர் வின்சென்ட் பார்வா அவர்கள் கூறினார்.

பழங்குடியினத்தைச் சேர்ந்த மக்களை, குறிப்பாக, கிறிஸ்தவர்களை, அரசியலில் ஈடுபடுத்துவது, இந்தப் பிரச்சனைகளுக்கு ஓரளவு தீர்வாக அமையும் என்று, ஆயர்கள் இக்கூட்டத்தில் முடிவெடுத்துள்ளனர் என்று, UCAN செய்தி கூறுகிறது.

இந்தியாவில் உள்ள 171 மறைமாவட்டங்களில், 26 மறைமாவட்டங்களில் பழங்குடியினர் பெருமளவு வாழ்கின்றனர் என்றும், இந்த மறைமாவட்டங்கள் பெரும்பாலும், இந்தியாவின் மத்திய மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் அமைந்துள்ளன என்றும், பழங்குடியினர் பணித்துறையின் செயலர், அருள்பணி ஸ்தனிஸ்லாஸ் திர்கி அவர்கள் கூறினார்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.