2017-03-03 15:31:00

திருத்தந்தை : உண்மையான நோன்பு பிறருக்கு உதவுவதாகும்


மார்ச்,03,2017. உண்மையான நோன்பு என்பது பிறருக்கு உதவுவதாகும், அதேநேரம், போலியான நோன்பு என்பது, மத உணர்வை, அழுக்கான செயல்களோடு கலப்பதாகும் மற்றும், இது, தற்பெருமையை பறைசாற்றுவதாகும், என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை தன் மறையுரையில் கூறினார்.

இந்நாளைய திருப்பலி வாசகங்கள், உண்ணா நோன்பு பற்றி, அதாவது, இத்தவக்காலத்தில், நம் ஆண்டவரிடம் நெருங்கிச் செல்வதற்கு அழைப்பு விடுக்கும் தவத்தைப் பற்றிப் பேசுகின்றன என்றுரைத்த திருத்தந்தை, தான் பாவி என்று உணர்ந்து, மனம் வருந்தும் உள்ளம் குறித்து இறைவன் மகிழ்கின்றார் என்ற திருப்பா வசனத்தையும் குறிப்பிட்டார்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றியத் திருப்பலியில், போலியான மத உணர்வில் கடைப்பிடிக்கப்படும் நோன்பு பற்றி, முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா சொல்வதையும் விளக்கினார் திருத்தந்தை.

வெளிவேட நோன்பு பற்றியும் விளக்கிய திருத்தந்தை, இயேசு வெளிவேடம் என்ற சொல்லை அடிக்கடி பயன்படுத்தினார் என்றும், நோன்பிருந்துகொண்டு, அதேநேரம், வீட்டில் வேலைசெய்பவருக்கு உரிய கூலியைக் கொடுக்காமல் இருந்தால், வெளிவேடம் என்றும் கூறினார்.

இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த சமயம் அது, இயேசு சபை அருள்பணியாளர் பேதுரோ அருப்பே அவர்கள், ஜப்பானில் மறைப்பணியாற்றியபோது, ஒரு பணக்கார தொழிலதிபர் அவரிடம் வந்து, நற்செய்திப் பணிகளுக்காக நன்கொடை வழங்கினார், அப்போது அவர் தன்னுடன், ஒரு புகைப்படக்காரரையும், ஒரு செய்தியாளரையும் உடன் அழைத்துச் சென்றிருந்தார், இவ்வளவுக்கும் அவர் கொடுத்த நன்கொடை பத்து டாலரே எனவும் கூறினார், திருத்தந்தை. 

கொடுமைத் தளைகளை அவிழ்ப்பதும், நுகத்தின் பிணையல்களை அறுப்பதும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்புவதும், எவ்வகை நுகத்தையும் உடைப்பதும், பசித்தோர்க்கு உங்கள் உணவைப் பகிர்ந்து கொடுப்பதும், தங்க இடமில்லா வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும், உடையற்றோரைக் காணும்போது அவர்களுக்கு உடுக்கக் கொடுப்பதும், உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக் கொள்ளாதிருப்பதும் அன்றோ நான் விரும்பும் நோன்பு என, உண்மையான நோன்பு பற்றிச் சொல்லும், இறைவாக்கினர் எசாயா நூல் பகுதியையும் மறையுரையில் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.

இந்த வார்த்தைகளை நம் இதயத்தில் பதித்து, நாம் எவ்வாறு நோன்பு இருக்கிறோம் எனச் சிந்திப்போம் எனவும், 200 யூரோக்கள் பணத்திற்கு உணவு அருந்திச் செல்லும் மனிதர் ஒருவர், வீடு திரும்பும் வழியில், பசியால் வருந்தும் ஒருவரைக் கண்டும் காணாதது போல் நடந்து செல்வது எப்படி இருக்கும்? என்ற கேள்வியுடன் மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், இவ்வெள்ளியன்று தன் டுவிட்டர் செய்தியாக, "உண்ணா நோன்பு என்பது, உணவைத் தவிர்ப்பது மட்டுமல்ல, பசியாய் இருப்போருடன் உணவைப் பகிர்ந்துகொள்வதும் ஆகும்" என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.