2017-03-14 15:05:00

தவக்காலச் சிந்தனை - யார் பெரியவர்?


நமது குடும்பங்களில், சமூகங்களில், நாடுகளில் யார் பெரியவர் என்ற கேள்வி, ஒரு மிகப் பெரிய பிரச்சனையாகவே இருக்கின்றது. பிறரை அடக்கி, ஒடுக்குகின்ற வலிமையும், எதையும் விலைபேசுகின்ற பணமும், பிறருக்கு ஆணையிடுகின்ற பதவியும், ஒருவனைப் பெரியவனாக்கும் என்று எண்ணி, அவற்றைத் தேடி ஓடுகின்றோம். அவ்வாறு, பெரியவனானால் மனநிம்மதி கிடைக்கும் என்ற எண்ணத்தால் வஞ்சிக்கப்படுகின்றோம். ஆனால் உண்மையில், வலிமையும், பணமும், பதவியும், ஒருவருக்கு அகங்காரத்தையும், ஆணவத்தையும் தருமே தவிர மன நிம்மதியை அளிப்பதில்லை. இந்த அகங்காரம் என்ற விஷக்கொல்லி நம்மை எப்பொழுதும் பிறர் முன்பு பெரியவனாக காட்டிக்கொள்ளவேண்டும் என்ற சிந்தனையை மனதில் விதைத்து, நம்மை, பதட்டமான ஒரு சூழலில் வைத்துவிடுகின்றது. நமது உறவுகளையும், நண்பர்களையும் நம்மிடமிருந்து பிரித்து நம்மை தனிமைப்படுத்திவிடுகின்றது. இத்தகைய நிலை, மனநிறைவையோ, மன அமைதியையோ, மனமகிழ்ச்சியையோ நமக்கு அளிப்பதில்லை. மாறாக, நம்மிடம் உள்ளவற்றை, பிறரோடு பகிர்ந்துகொள்வதிலும், வலிமையற்றவர்களுக்கு உறுதுணையாக இருப்பதிலும், பிறருக்கு நம்மால் இயன்ற பணிகளைச் செய்வதிலும்தான் முழுநிறைவையும், மகிழ்ச்சியையும் அடையமுடியும். இதற்காகத்தான் பெரியவராக இருக்க விரும்புவோர் பிறருக்கு தொண்டாற்றட்டும் என்று இயேசு அழைப்புவிடுகின்றார். அவர் அழைப்பை ஏற்று இயேசுவின் பார்வையில் பெரியவராகிடுவோம்.

- அருள்சகோதரர் செலுக்காஸ் சே.ச.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.