2017-03-15 15:59:00

ஆசிய இளையோர் நாள் நிகழ்வுகள், ஜூலை 30ம் தேதி ஆரம்பம்


மார்ச்,15,2017. ஆசிய இளையோர் நாள் நிகழ்வுகள், ஜூலை 30ம் தேதி முதல், ஆகஸ்ட் 9ம் தேதி முடிய, இந்தோனேசியாவின் யோக்யகார்த்தா (Yogyakarta) என்ற நகரில் நடைபெறும் என்று, தலத்திருஅவை அறிவித்துள்ளது.

இளையோர் நாள் நிகழ்வுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜகார்த்தா பேராயர், இக்னேசியஸ் சுகார்யோ (Ignatius Suharyo) அவர்கள், ஆசியாவின் 29 நாடுகளைச் சேர்ந்த 3000த்திற்கும் அதிகமான இளையோர் இச்சிறப்பு நிகழ்வில் பங்கேற்பர் என்று கூறினார்.

"மகிழ்வு நிறைந்த ஆசிய இளையோர்! பன்முகக் கலாச்சாரம் கொண்ட ஆசியாவில் நற்செய்தியை வாழ்வது" என்ற தலைப்பில் நடைபெறும் இந்த ஆசிய இளையோர் நாள் நிகழ்வுகளை, இந்தோனேசியத் தலத்திருஅவை ஒருங்கிணைக்க வழங்கப்பட்டுள்ள வாய்ப்பிற்கு பேராயர் சுகார்யோ அவர்கள் நன்றி கூறினார்.

ஆசிய நாடுகளில் பெருகிவரும் வறுமை, சுற்றுச்சூழல் சீரழிவு, மனித உரிமை மீறல்கள், சகிப்புத் தன்மை குறைவு, இளையோரிடம் பரவிவரும் போதைப்பொருள் பயன்பாடு ஆகிய சமுதாயப் பிரச்சனைகள் குறித்த விவாதங்கள் இளையோர் நாள் நிகழ்வுகளின் ஓர் அங்கமாக இருக்கும் என்று, இந்தோனேசிய ஆயர் பேரவையின் இளையோர் பணிக்குழுவின் தலைவர், ஆயர் Pius Riana Prapdi அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.