2017-03-17 13:21:00

தவக்காலச் சிந்தனை : பிறரின் நன்மைத்தனத்தை உணர்வோம்


இன்றய நற்செய்தியிலே, வழிதவறி சென்ற மகன், மனம்திரும்பி, தந்தையிடம் திரும்பிவந்து, மன்னிப்பு கேட்கின்றான். தந்தையும், அவனை அரவணைத்து, ஏற்றுக்கொள்கின்றார். மகன், தந்தையின் அன்பை உணர்ந்ததனால், தந்தையைத் தேடிவரவும், தந்தை, மகனின் அன்பை உணர்ந்ததனால், அவனை மன்னித்து, ஏற்றுக்கொள்ளவும் முடிகின்றது. நம்மில் பலருக்கு ஒரு நோய் - பிறர் நமக்கு செய்கின்ற தீங்கினை மட்டும் நினைவில் பதித்து, அவர்கள் செய்த நன்மைகளை மறந்துவிடுவது. ஆம், ஏதோ ஒரு சூழலில், நம்மைப்பற்றி தவறாகவோ, இழிவாகவோ, அல்லது, நமக்கு எதிராகவோ கூறிய ஒரு சில வார்த்தைகளையோ, அல்லது, ஒரு சில செயல்களையோ, மனதில் வைத்துக்கொண்டு, நமது உறவுகளை முறித்துக்கொள்கின்றோம். அவற்றை நினைத்துப் பார்க்கும் பொழுதெல்லாம், நம் மனதுக்குள் கசப்புணர்வும், வெறுப்புணர்வும் ஊற்றெடுக்கின்றன. இவை, பிறர் மீதுள்ள கோபத்தையும், பகையையும், அதிகரிக்கின்றன. இதனைத் தவிர்த்து, இந்த தவக்காலத்தில், அவர்கள் நமக்குச் செய்த நன்மைகளை நினைத்துப் பார்ப்போம். எந்த ஒரு மனிதரும், நமக்குத் தீங்கு மட்டும் செய்வதில்லை. அவர்கள், நம்மீது அக்கறைகொண்டு, நமது நலனுக்காக ஆற்றிய செயல்கள், ஏராளமாக இருக்கும். எனவே, இந்த தவக்காலத்திலே, பிறரின் நன்மைத்தனத்தைக் கண்டுணரவும், ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளவும், அதனால், ஓர் அன்பு உலகம் படைக்கவும் முற்படுவோமா?

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.