2017-03-22 16:50:00

புதுப்பிக்கப்பட்ட இயேசுவின் கல்லறைக் கோவில் அர்ச்சிப்பு


மார்ச்,22,2017. புனித பூமியின் எருசலேம் நகரில், புதுப்பிக்கப்பட்ட இயேசுவின் கல்லறைக் கோவில், மார்ச் 22, இப்புதன் காலை பத்துமணியளவில், கிறிஸ்தவ ஒன்றிப்பு வழிபாட்டு முறையுடன் அர்ச்சிக்கப்பட்டது.

ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை, 3ம் தியோபிலஸ், ஆர்மீனிய முதுபெரும் தந்தை Nourhan Manougian, இலத்தீன் வழிபாட்டு முறை பேராயர், Pierbattista Pizzaballa, மற்றும் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை, பார்த்தலோமேயு ஆகியோர், இந்த அர்ச்சிப்பு வழிபாட்டில் பங்கேற்றனர்.

கல்லறைக் கோவிலின் உள்புறத்தில், கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக திறக்கப்படாமல் இருந்த ஒரு பளிங்குக் கல் மேடை, கடந்த அக்டோபர் மாதம் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இயேசுவின் உடல் அடக்கம் செய்யப்பட்டபோது அமைந்திருந்த முதல் நூற்றாண்டு கட்டமைப்பை வெளிப்படுத்தும் பகுதி, இந்த உள்புற அறையில், ஒரு மாடம் போல திறக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பலமுறை அழிக்கப்பட்டு, உருவாக்கப்பட்டுள்ள இந்த கல்லறைக் கோவில், 1810ம் ஆண்டு நிகழ்ந்த ஒரு தீ விபத்திற்குப் பின் இறுதி முறையாகக் கட்டியெழுப்பப்பட்டது.

கடந்த ஒன்பது மாதங்களாக நடைபெற்ற இந்த புதுப்பிக்கும் பணிக்கென அனைத்து திருஅவைகளும், சபைகளும் இணைந்து, 40 இலட்சம் டாலர்கள் நிதி உதவி செய்துள்ளன என்று ஊடகங்கள் கூறுகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.