2017-03-25 14:42:00

தவக்காலச் சிந்தனை – முழுமையானப் பார்வை பெறவேண்டும்


இஞ்ஞாயிறு நற்செய்தியில் நாம் சந்திக்கும் பார்வை இழந்த மனிதர், உடலளவில் மட்டுமல்லாமல், உள்ளத்திலும் பார்வை பெறுகிறார். இதற்கு நேர் மாறாக, உடலளவில் தெளிவான பார்வை கொண்டிருந்ததாக எண்ணிக்கொண்டிருந்த பரிசேயர்கள், படிப்படியாகத் தங்கள் அகத்தில் பார்வை இழப்பதையும், யோவான் கூறியுள்ளார். இவ்விரு துருவங்களுக்கும் இடையே, பார்வை பெற்ற மனிதரின் பெற்றோர், அரைகுறையாய் பெறும் பார்வையைக் குறித்தும், யோவான் பாடங்கள் சொல்லித் தருகிறார்.

தங்கள் மகன் பார்வையற்றிருந்தபோது, அதை இறைவனின் சித்தம் என்று ஏற்றுக்கொண்ட அந்த பெற்றோர், பார்வை பெற்று, இறைவனின் புதுமைக்கு ஒரு சாட்சியாக நின்ற தங்கள் மகனை ஏற்றுக்கொள்வதற்குத் தயங்கினர். பரிசேயரின் சட்ட திட்டங்கள், அவ்வளவு தூரம், அவர்களைப் பயமுறுத்தி, பார்வை இழக்கச் செய்திருந்தது. பார்வையற்றவர், பிறந்தது முதல், தன் பெற்றோரையோ, பரிசேயர்களையோ பார்த்ததில்லை. பார்வைபெற்ற அன்றுதான், முதல் முறையாக, தன் பெற்றோரையும், பரிசேயரையும் அவர் பார்க்கிறார். தன் பெற்றோரது பயத்தைக் கண்டு அவர் பரிதாபப்பட்டிருப்பார். அதற்கும் மேலாக, அவருடைய பரிதாபத்தை அதிகம் பெற்றவர்கள் அந்த பரிசேயர்கள். கடவுளுக்கும், ஆலயத்திற்கும் மிக நெருக்கத்தில் வாழும் இவர்கள், கடவுளைக் காணமுடியாத குருடர்களாய் இருக்கிறார்களே என்று, அவர் பரிதாபப்பட்டிருப்பார்.

பார்வை பெற்றவரை, கோவிலிலிருந்து, யூத சமூகத்திலிருந்து வெளியேற்றினர், பரிசேயர்கள். அதுவரை ஒதுங்கியிருந்த இயேசு, இப்போது அவரைச் சந்தித்தார். அச்சந்திப்பில், அம்மனிதரின் சாட்சியம் இன்னும் ஆழப்பட்டது. முழுமை அடைந்தது. தனக்கு புதுமை செய்தவர், 'இயேசு' என்றும், 'இறைவாக்கினர்' என்றும் (யோவான் 9:15,17) படிப்படியாக ஏற்றுக்கொள்ளும் அளவு, அக ஒளி பெற்ற அவர், இறுதியில், இயேசுவைச் சந்தித்தபோது, அவரது அகம் முழுவதும் இறை ஒளியால் நிறைந்தது. இயேசுவின் முன் "ஆண்டவரே, நம்பிக்கை கொள்கிறேன்" (யோவான் 9:38) என்று முழுமையாய் சரணடைகிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.