2017-03-31 16:00:00

98 வயதிலும் வில்லாய் வளையும் யோகாசன குரு


மார்ச்,31,2017. கோவையைச் சேர்ந்த 98 வயதான நானம்மாள் அவர்கள், தற்போதும் தீவிர யோகாசன பயிற்சியில் ஈடுபட்டு வருவதோடு, கற்றுக்கொடுக்கும் பணியிலும் ஈடுபட்டிருக்கிறார்.

இதற்காக, இந்திய குடியரசுத்தலைவரிடமிருந்து, பெண் சக்தி விருதை வென்றிருக்கும் நானம்மாள் அவர்கள், இந்தியாவின் மிக வயதான யோகாசன ஆசிரியர்.

கோயம்புத்தூரின் கணபதி பகுதியில் வசிக்கும் நானம்மாள் அவர்கள், பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள ஜமீன் காளியாபுரத்தில், 1920ஆம் ஆண்டு, ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்.

தனது தாத்தா மன்னார்சாமியிடமிருந்து யோகாசனப் பயிற்சியைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்த நானம்மாள் அவர்கள், அந்தப் பயிற்சியை 90 ஆண்டுகளுக்குப் பிறகும் விடவில்லை.

நானம்மாள் அவர்களுக்கு திருமணம் ஆன பிறகு, புகுந்த வீட்டில் அவரது யோகா பயிற்சியை சற்று விசித்திரமாகப் பார்த்தனர். இருப்பினும், அவரது கணவர் சித்த வைத்தியர் என்பதால், அவர், நானம்மாளின் பயிற்சிக்கு எவ்விதத் தடையும் விதிக்கவில்லை.

சில மாதங்களுக்கு முன்பாக கீழே விழுந்ததில், நானம்மாள் அவர்களுக்கு, எலும்பு முறிவு ஏற்பட்டாலும், தற்போதும் கடினமான யோகாப் பயிற்சிகள் செய்வதை அவர் விடவில்லை.

ஏறத்தாழ, 80 ஆண்டுகளாக யோகா பயிற்சியைச் செய்துவரும் நானம்மாளின் குடும்பத்தைச் சேர்ந்த 36 பேர், தற்போது, யோகாசனத்தைக் கற்றுக்கொடுக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருப்பதாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். 

ஆதாரம் : பிபிசி / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.